பக்கம் எண் :

மூலமும் உரையும்19

(க - து.) ‘காண்டவவன தகனஞ் செய்த காலத்தில் அருச்சுனற்குத் தன் தோள்கள் இரண்டும்தாம் உதவியாக இருந்தன’ என்றார் வியாசர்.

(வி - ரை.) காண்டவவனம் - கண்டவனென்னும் அரக்கன் இருந்த வனமாகலால் இப் பெயர் பெற்றது. இதை அக்கினி பகவான் உண்ண நினைத்தான், அருச்சுனன் உதவியாக இருந்து எரிக்கச்செய்தான் என்பது பாரதம். விரிவு பாரதத்தில் காண்க. ‘அமரர்.........ஓடிய நாள்’ தறுகண்மை கொண்ட வீரனாதலால் தான் ஒருவனே நின்று போர்செய்து வென்றான் என்று அருச்சுனன் பெருமிதத்தைச் சுட்டிக் காட்டிற்று: இசையெச்சம்.

தருமன் தன் வனவாழ்க்கைக் காரணத்தை வினாவல்

15. பேரரசும் எங்கள் பெருந்திருவும் கைவிட்டுச்
சேர்வரிய வெங்கானம் சேர்தற்குக் - காரணம்தான்
யாதோவப் பாவென்றான் என்றும்தன் வெண்குடைக்கீழ்த்
தீதோவப் பார்காத்த சேய்.

(இ - ள்.) என்றும் தன் வெண்குடை கீழ் தீது ஓவ பார்காத்த சேய் - எக்காலத்தும் தன் வெண்கொற்றக் குடைக்கீர் (குடிமக்கட்கு)த் துன்பம் நீங்கி இன்பமுற ஆட்சிபுரிந்த தருமராசனானவன், அப்பா - என் ஐயனே ! எங்கள் பேர் அரசும் பெரும் திருவும் கைவிட்டு - எங்களது பெரிய அரசுரிமையையும், அளவற்ற செல்வத்தையும் இழந்து, சேர்வு அரிய வெம் கானம் சேர்தற்கு - (மக்கள் எவரும் வந்து) அடைதற்கு அரியதான கொடிய காட்டில் நாங்கள் வந்து வாழ்வதற்கு, காரணம் யாது என்றான் - காரணம் என்னவென்று கேட்டான்.

(க - து.) தருமன், தன்னைச் சார்ந்தோருடன் காட்டில் வந்து வாழ்வதற்குக் காரணம் என்னவென்று வியாசரை வினவினான்.

(வி - ரை.) பெருமை+அரசு-பேரரசு என முதனீண்டது. பண்புப் பெயராகலான், 1‘ஆதிநீடல்’ என்ற நன்னூல் விதிப்படி வந்தது. அப்பா! என்றது, வியாசர் தருமனுக்குப் பிதாமகனார் என்னும் முறைபற்றி அழைத்தான் என்க. சேய் - செம்மையையுடையான். இளமையும் அழகும் பண்பும் மிக்காரை ‘சேய்’ என்பது ஆன்றோர் மரபு. இறைவனையும் இப் பெயரால் வழுத்துவர். ‘2எய்யா நல்லிசைச் செவ்வேற் சேஎய்’ என்றார் நக்கீரரும். (8)

1. நன்னூல்: 134. 2. திருமுருகு: 61.