கையாற் பிடித்தல். திருமணஞ்
செய்தபின் கைப்பிடித்துச் செல்லுதல் மரபாகலான்,
‘தடக்கையால் பற்றி’ என்றார். இவ்வாறே
கம்பநாடரும் சீதை வாயிலாக,
1‘வந்தெனைக்கரம் பற்றிய வைகல்’
என்றதும் காண்க. ‘காதல் இருவர்
கருத்து ஒருமித்து’ என்பதாலும் முன்னரே நளனும்
தமயந்தியும் உள்ளக் கருத்தொன்று பட்டு
இருந்தவராகலானும், திருமணம் நிகழ்ந்தபின்
பன்னெடுங் காலம் இன்பந்துய்த்திருந்ததை ‘புணர்ந்தான்
நெடுங்காலம் புக்கு’ என்றார். புக்கு - தங்கி
யென்னும் பொருட்டாய்ப் பகுதி இறந்தகாலம்
காட்டிநின்றது, நக்கான் என்பதுபோல. தமயந்தியும்
நளனும் ஒன்றுபட்டு இன்பந்திளைத்திருந்தார்
என்பதைக் குறித்தவாறாம். ‘வாள் நுதலும் தானும்
புணர்ந்தான்,’ என ஒருமையாகக் குறித்தார்.
திணைபால் முதலியன விரவி வந்தபோது
சிறப்புப்பற்றி ஒரு முடிபாகுமென்பது இலக்கண நூலார்
கொள்ளும் மரபு. இவ்வாறு,
2‘பார்ப்பார் அறவோர்
பசுப்பத்தினிப் பெண்டிர்
மூர்தோர் குழவிஎனும் இவரை’
எனத் திணை விரவி ‘இவர்’ எனப்
பன்மை முடிபேற்றதும்,
3‘நானும் என்சிந்தையும் நாயகனுக்
கெவ்விடத்தோம்
தானும்தன் தையலும் தாழ்சடையோன்
ஆண்டிலனேல்’
என்பதில், பால் விரவி ‘ஆண்டிலனேல்’
என ஒருமை முடி பேற்றதும் பின்னும் பல படவரும்
சான்றோர் நூல்களானும் அறிக. ‘புணர்ந்தார்’
எனப் பாடங்கொள்ளின் பொருட்சிறப்பின்மை
அறிக. (171)
சுயம்வர காண்டம் முற்றும்.
1. கம்பரா, சூடாமணி: 34. 2. சிலப்,
உக: 53 - 4.
3. திருவாசகம், திருக்கோத்தும்பி: 15.
|