2. கலிதொடர் காண்டம்
திருமால் காப்பு
179. முந்தை மறைநூல் முடியெனலாம் தண்குருகூர்ச்
செந்தமிழ் வேத சிரமெனலாம் - நந்தும்
புழைக்கைக்கும் நேயப் பொதுவர் மகளிர்க்கும்
அழைக்கைக்கு முன்செல் அடி.
(இ - ள்.) நந்தும் புழைக்கைக்கும்
நேயப் பொதுவர் மகளிர்க்கும் - (முதலையிடத்
தகப்பட்டுக்கொண்டு) வருந்திய யானைக்கும்
தம்மிடம் அன்புபூண்ட இடையர்குலப் பெண்களுக்கும்,
அழைக்கைக்கு முன்செல் அடி - (காப்பதற்கும்,
தழுவுவதற்கும் அவர்கள் அழைத்தபோது) முன்னே சென்ற
(திருமாலின்) திருவடிகளானவை, முந்தை மறைநூல் முடி
எனல் ஆம் - பழைமையான வேதநூலின் தலைமையிடம்
என்று கூறலாம், தண் குருகூர் செந்தமிழ் வேத சிரம்
எனல்ஆம் - குளிர்ச்சி மிக்க குருகூரராகிய
நம்மாழ்வார் அருளிய செந்தமிழ்மொழியானியன்ற
திருவாய்மொழி வேதத்தினது முடி என்று கூறலாம்.
(அவ்வடிகளை வணங்குவோம்; அவை நமக்கு அருள்புரிதல்
வேண்டி.)
(க - து,) யானை முன்னும் அன்புடைய
இடைக் குலப் பெண்களின் முன்னும் அழைத்தற்கு முன்பு
சென்று நின்ற திருமாலின் திருவடிகளைப் பழமறையின்
முதன்மையெனலாம்; அன்றிச் செந்தமிழ் மறையின்
முடியென்று கூறலாம், (அவைகளை வணங்குவோம்)
என்பதாம்.
(வி - ரை.) முந்தை - பழைமை. மறை -
வேதம். முதன் முதல் தோன்றிய நான்மறை. நுண்ணிய
பொருள்களை உள்ளடக்கிக்கொண்ட காரணத்தால்
மறையெனப் பெயர் பெறலாயிற்று. மறை என்பது
ஆகுபெயர். திருமாலின் திருவடிகள் பழைமையான தமிழ்
நான்மறைகட்கு முதன்மையானது; பின் தோன்றிய நம்
மாழ்வார் அருளிய செந்தமிழ்ப் பாவானியன்ற
மறைக்கும் அவ்வடிகள் முதன்மையாக அமைந்தன.
முதலைவாய்ப்பட்டுத் தப்பிப் பிழைக்க வழிகாணாது
தத்தளித்து வருந்தி ‘முதற்பொருளே!’
|