பக்கம் எண் :

212நளவெண்பா[ கலிதொடர் காண்டம்]

என்று வாய்விட்டுக் கதறி அழைத்த களிற்றைக் காக்க ஓடிவந்தன வென்பாராய்ப் ‘புழைக்கைக்கு......முன் செல் அடி’ என்றும், இடைக்குலப் பெண்கள் பேரன்பினராய்க் ‘கண்ணா,’ வென்று கூவி அழைத்த காலமெல்லாம் முன்னே நடந்துவந்து காட்சியளித்தலால், ‘நேயப் பொதுவர் மகளிர்க்கு......முன் செல் அடி’ என்றும் கூறித், திருமால் பேரிரக்கப்பண்புடையான் என்றும், வேண்டுவார் வேண்டுவதே ஈயும் அவன்றன் மேதகவையும் சுட்டியுணர்த்தி, இத்தகைய பேரருட் பெருங்கடலாகிய திருமாலின் திருவடிகளை வணங்கினால், நாம் இருள்சேர் இருவினையும் அற்று இறவாத இன்புற்றிருக்கலாம் எனவும் குறிப்பால் உணர்த்தியவாறாம். இதில் திருமாலின் பத்துப்பிறப்புள் ஒன்றாகிய கண்ணன் பிறப்பில் செய்த திருவிளையாடலில் ஒன்றான இடைக்குலப் பெண்கள் அழைத்த போது வந்ததை, ‘அழைக்கைக்கு முன் செல் அடி’யெனக் குறித்தார். அதனால் இது குறிப்பெச்சம். புழை - துளை; துவாரமுள்ள கையையுடையது என்னும் பொருளது. அஃதாவது, யானை. பொதுவர் உலகமக்கள் யாவர்க்கும் பொது நலஞ் செய்பவர் என்னும் பொருளுடையது. பொதுநலமாவது, ஆனிரை எருமைநிரை ஆட்டுநிரைகளைப் பாதுகாத்து அவைகளின் பால், நெய், தயிர் முதலிய பாற்பயனால் எல்லோருக்கும் நலஞ்செய்கின்ற பொதுநோக்குடையவர் என்க. அழைக்கை - அழைத்தல்: தொழிற் பெயர். (1)

சிவபெருமான் வணக்கம்

180. செக்கர் நெடுவானில் திங்கள் நிலாத்துளும்பி
உக்க தெனச்சடைமேல் உம்பர்நீர் - மிக்கொழுகும்
வெள்ளத்தான் வெள்ளி நெடுங்கிரியான் மெய்யன்பர்
உள்ளத்தான் எங்கட் குளன்.

(இ - ள்.) செக்கர் நெடுவானில் - நீண்ட செவ்வானத்தின் மேல், திங்கள் நிலா துளும்பி உக்கது என - நிலவின் கதிரொளியானது ததும்பிச் சிதறியது என்னும்படி, சடைமேல் உம்பர்நீர் மிக்கு ஒழுகும் வெள்ளத்தான் - தன் (செஞ்) சடை முடிமீது வானநீர் பெருகி ஓடுகின்ற நீர்ப்பெருக்கையுடையவனும், வெள்ளி நெடும் கிரியான் - நீண்ட வெள்ளிமலையையுடையவனும், மெய் அன்பர் உள்ளத்தான் - உண்மையடியார்களின் செம்மனத்தை விட்டு நீங்காதவனும் ஆகிய சிவபெருமான், எங்கட்கு உளன் - எமக்குப் (பாதுகாப்பாக என்றும்) இருக்கின்றான். (அவனை வணங்குவோம்.)