பக்கம் எண் :

மூலமும் உரையும்419

1‘பால்நினைந் தூட்டும்தாயினும் சாலப்
பரிந்துநீ பாவியே னுடைய
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி
உலப்பிலா ஆனந்தம் ஆய
தேனினைச் சொரிந்து புறம்புறம் திரிந்த
செல்வமே’

என்று இறைவன் பேரருட் பெருக்கிற்கு இத்தாய்மையன்பையே சுட்டியுரைத் தருளியதும் காண்க. தலைவனும் தலைவியும் உடன் போக்குத் துறையில் தலைவிதன் மென்மைத்தன்மையை நினைந்து வருந்திய நற்றாயின் இயல்பைத் தாய்மையன் பின் உச்சநிலை தோன்ற,

2‘பூவையுண் டோபுனக் கிள்ளையுண்
டோவெண் புதியமணற்
பாவையுண் டோபெற்ற பாவியுண்
டோகுன்று பார்த்தழைக்கும்
தேவையுண் டோகற்ற சிற்றிலுண்
டோமற்றென் குற்றமுண்டோ
யாவையுண் டோமக ளேசொல்லு
நீயவ் வருஞ்சுரத்தே’

என்னும் அம்பிகாபதிகோவையில் கூறும் தாயன்பும் பாரனைத்தும் பொய்யெனத் துறந்த பட்டினத்தடிகள், தம் அளவற்ற செல்வத்தின்பால் வெறுப்புண்டாகி உடைகோவணமாக உறங்கப் புறந்திண்ணையாகக்கொண்டு திருவோடு கையில் ஏந்தி மெய்யுணர்வுச் செல்வராய் விளங்கியகாலைத் தமக்கு மெய்யுணர்வு ஆண்டவன் கூட்டியதை,

3‘ ............................மெய்யருளாம்
தாயுடன் சென்றுபின் தாதையைக் கூடிப்பின் தாயைமறந்
தேயுமதே நிட்டை என்றான் எழிற்கச்சி ஏகம்பனே’

என வரும்பாடலில், இறைவன் திருவருட்டிறத்தை ‘மெய்யருளாம் தாய்’ என்று தாய்மைப் பண்பின் சிறப்புத்தோன்ற உரைத்தருள்வதும்,

1. திருவாசகம், பிடித்த : 9.
2. அம்பிகாபதிகோவை : 392.
3. பட்டினத்தார், திருவேகம்ப : 11.