இரணிய வதைப் பரணி

10

New Page 1

    “கோபத்தால் அன்றி இயல்பாகவே சிவந்த கண்ணை உடைய செல்வனே! பிருங்கலாதன் உன்னைப் புகழ்தலாலே, இரணியன் சினத் தீயால் புகைந்த நெஞ்சொடும் புலர்ந்த சந்தனத்தொடும், அவனைப் பலபல பிணிகள் படப் பிணித்தபோது, மிகுந்த நோயால் ஒடுங்கி நடுக்கத்தை உடையவனாகி, விரிந்த புகழை உடைய பிருங்கலாதன், தன் தந்தை ஆதலின், தன்னை இகழ்ந்தாலும் அவனை இகழாத நெஞ்சினன் ஆக, நீ இரணியனை இகழ்ந்து, உன்பால் அன்பு பூண்ட பிருங்கலாதன் நெஞ்சில் பொருந்தி, ஒன்றாக வரம்கொண்ட இரணியனுடைய மலைபோன்ற மார்பில் பகைவலி கெடச்சென்று, துன்பத்தைக் காட்டும் உற்பாதங்களோடு இடிபோல் அவன் முரசு ஒலிப்ப, நீ வெளிப்படுதலால் வெடித்து ஒடிந்த தூணின் பிளப்போடு ஒத்த, நின்னால் தடியப் பட்ட ஊனும் தசையும் பலவாக வகிர்ந்து எடுத்த நகங்களை உடையாய்.” என்பது பொருள்.

    சீவக சிந்தாமணியில் இறந்துபட்ட தன் கணவன் சச்சந்தனைப் பற்றி விசயை சீவகனுக்குக் கூறும்போது ( 1813 ), “என் கண் தங்கிய அன்பினால், இரணியன் பட்டது எம் இறை எய்தினான்” என்கிறாள். உரையாசிரியர் நச்சினார்க்கினியர் “இரணியன் பட்டது தன்னை இடிக்கும் துணையார் சொல் கொள்ளாதே, வேறொரு தத்துவம் இன்று என்றதனால் கேடு விளைந்து, உதவி இன்றி, நின்ற நிலை” எனப் பொருள்கொள்கிறார்.

    இக் குறிப்புகள் அன்றி, ஆழ்வார்கள் காலம் வரை, இரணியன் கதைக்கு அக்காலத்தில் வழங்கிவந்த எம் மொழி இலக்கியத்திலோ வரலாற்றிலோ, ஆதாரம் கிடைத்திலது.

    மடங்கலின் வலிமையை மனிதன் நெடுங்காலமாக அறிவான். சிங்கம் அரசின் சின்னமாக நம் நாட்டுச் சமூகங்களில் மட்டும் அன்றி, பண்டைய எகிப்திய, சீன, சமூகங்களிலும், பின் எழுந்த கிரேக்க, உரோம சமூகங்களிலும், உலகெங்குமே கருதப்பட்டது. அரசு வீற்றிருப்பது அரி ஆசனத்தில்; அரி உருவம் பொறித்த தூண்களும், கொடிகளும், பல நாடுகளில் இருந்தன. சிங்கத்திற்கு இயற்கையாக அமைந்த மிடுக்கும், அஞ்சா நெஞ்சமும், எப்பாலும் ஒருங்கே நோக்கும் சிறப்பும், எதிரியை வெருவிக்கும் ஆழ்ந்த கர்ச்சனையும், முன் அடியால் யானை மத்தகத்தையும் பிளக்கக் கூடிய வலிமையும் மனிதனுடைய மனதை நெடும் பண்டைக்காலத்திருந்தே கவர்ந்தன. மனிதனுக்கு இயற்கையாக