இரணிய வதைப் பரணி

11

அமைந்த பகுத்தறிவும், சூழ்ந்து எண்ணும் திறனும், சிங்கத்தின் வலியோடு சேர்ந்தால், மானுடமடங்கல் எதையும் சாதிக்கமுடியும் என்ற துணிபால், கவிஞர் அரியை மானுடமடங்கலாக்கி வெலற்கரிய இரணியனையும் வெல்வித்தனர்.

    இவ்வாறு, மகாபாரதத்தில் பிறந்த ஒரு உபகதை புராணங்கள் வாயிலாக வளர்ந்து, கவிஞர் கற்பனையில் செழித்து, ஸ்ரீ வைஷ்ணவக் கருத்துக்களைத் தாங்கி, மகாவிஷ்ணுவின் விபவ அவதாரம் ஒன்றில் பக்திச் சுவையோடு இன்று விளங்குகிறது.

( இ ) ஆழ்வார்கள் 

    இந்நிலையில் ஆழ்வார்களும், அவர்களை ஒட்டிக் கம்பனும், இவ் அவதாரக் கதையைச் சுவை மிக்க, தீந்தமிழ்க் கவிதையில் நமக்கு வடித்துத் தந்தனர்.

    ஆழ்வார் பாசுரப்படி இரணியன் கதை வருமாறு:

    “எல்லை இலாத தவமும் வரமும் கருதி, அல்லல் செய்த இரணியனுக்கு அஞ்சி, இமையோர் இறைவனை அடைந்து, ‘வணங்காமுடியான் உன்னை இகழ்ந்தான்; மூர்க்கன் செயலால் தளர்ந்தோம்; சரண் தா’ என்ன, ‘அரண் ஆவோம்; முரண் ஆனவனை முடிப்போம்’ என்றான்.

    “பொன் பெயரோன் பள்ளியில் ஓதிவந்த தன் சிறுவன் இறைவனது ஆயிரநாமம் ஓத, பொறுப்பு இலன் ஆகி, பிள்ளையைச் சீறி, வெகுண்டு, தூண்புடைத்தான்.

    “அளந்திட்ட தூணை அவன் தட்ட, ஆங்கே வளர்ந்திட்டது ஓர் பிறை எயிற்று அனல்விழிப் பேழ்வாய் ஆள்அரி, அதுகண்ட பொன்னன் வயிறு அழல வாள் உருவி எதிர்ந்தான். வாள் எயிற்றுக் கோளரியோ, ஏனோர் அஞ்ச, வெஞ்சமத்து எரி விழித்தது.

    “அப்போது, வானோர், ‘எரிந்த பைங்கண், இலங்கு பேழ்வாய், எயிற்றொடு இது எவ் உரு?’ என்று கலங்கி இரிந்தோட, நாத்தழும்ப நான்முகனும் ஈசனும் முறையால் ஏத்த, அந்தி அம் போதில் வந்த ஆள் அரி, உரம் பற்றி, இரணியனை உகிர் நுதியால் ஒள்ளிய மார்வு உறைக்க ஊன்றிச் சிரம்பற்றி, முடி இடியக் கண் பிதுங்க, வாய் அலற, ஒண் மார்பு அகலம் குருதி குழம்பி எழ, வள் உகிரால் மார்பு இரண்டு கூறாகக் கீறி, போழ்பட ஈர்த்துப் பிளந்து தெழித்தான். குலமகற்கு இன் அருள் கொடுத்தான்”