4
4. இரணிய வதைப் பரணி
1. கடவுள் வாழ்த்து ( தாழிசைகள்
1-30 )
நம்மாழ்வாருடைய திருமேனியைக் கேசாதி பாதமாக ஆசிரியர் அனுபவிக்கிறார்.
ஸ்ரீ வைஷ்ணவ தத்துவங்களைப் பெருமாள், திருமகளுக்கும்
திருமகள் சேனை முதலியாருக்கும் உபதேசித்தனர். அவை வான் உலகிலேயே நிலவின. பூ உலகில் மாறனுக்கு
அவற்றைச் சேனை முதலியார் உபதேசித்தார். மறை துணிந்த அப் பொருள் முடிவை இன் சொல் அமுது ஒழுகுகின்ற
தமிழினில் விளம்பியதால் மாறனை ‘ஞான தேசிகன்’ என ஆசிரியர் போற்றுகிறார்.
இக் காவியத் தலைவனுடைய புகழ் சிறக்கவேண்டி, ஆழி,
சங்கு, வில், வாள், கதை என்ற ஐம் படைகளையும் ஆசிரியர் துதிக்கிறார். அதன் பின் அரவின்
அமளி, பறவை அரசன், சேனை முதல் நாதர் ஆகிய நித்திய சூரிகளை வணங்குகிறார்; கலைமடந்தையையும்
கொற்றவையையும் கும்பிடுகிறார்; பெருமாளுடைய திருமேனியைத் தொழுகிறார். ஆழ்வார் ஆசார்யர்களை
உணவு தர, வளவன் உலகு வளர, வேண்டுகிறார்.
2. கடை திறப்பு ( தாழிசைகள்
31-60 )
அழகிய பெண்கள், காமம் விளைவிப்போர், வான் அரமகளிர்,
மலை அரமகளிர், நீர் அரமகளிர், நாக மகளிர், ஆகப் பலமாதரைத் தம் கதவின் தாழ் நீக்கி
இரணியன் போர்க் கதையைக் கேட்கவும் பாடவும் அழைக்கிறார். இது சிருங்காரரஸம் ( காமச்சுவை
) நிறைந்த பகுதி.
இவற்றுள் காணப்படும் சில தாழிசைகள் கலிங்கத்துப்பரணியிலும்
உள்ளன.
மறைப் பொருளைத் தூணில் சிறுவன் காட்டத் துணிந்த
கதை, தடக்கை உகிரால் இரணியனை இடந்த கதை, அவுணேசன் ஆள் அரியார் மடியில் துயின்ற கதை,
எனக் காவியத்தின் வருபொருள் உரைக்கிறார். தக்கயாகப் பரணியிலும் இவ்வாறே உள்ளது.
3. காடு பாடியது ( தாழிசைகள்
61-80 )
கொடிய பாலைவனத்தின் தன்மை, வெப்பம், அங்குள்ள மரங்கள்,
புதர்கள், பறவைகள், விலங்குகள், ஊர்வன, யாவற்றையும் நம் கண்முன் நிறுத்துகிறார். இப்பகுதியில்,
தற்குறிப்பேற்ற அணி, மயக்க அணி, ஐய அணி நிரம்பிய பாடல்கள் பல உள.
|