இரண
இரணியன் அமராபதியில் இருந்து மூவுலகையும் ஆண்டு
வந்தான். ஒரு நாள் பூவுலகில் தன் தலைநகராகிய சோணித புரத்துக்குப் பரிவாரங்களுடனும், பணிபுரியும்
அமரரோடும் புறப்பட்டான். சோணிதபுரத்தார் ‘வாழி’ என ஏத்த, நகர் வலம் வந்து, அந்திமாலையில்
தன் கோயில் புக்கான்; தன் தேவி சுகந்தமாலையுடன்
இன்பம் நுகர்ந்தான்.
இரணியனது ஊர்ப் பெயர் வேறு நூல்களில் காணப்படவில்லை.
தேவியின் பெயர் ‘கயாது’ என உள்ளது.
நாளடைவில் சுகந்தமாலை கருவுற, திருமால் ஏவலால்
பரம பதத்திலிருந்து சங்குகன்னன் இரணியன் மதலையாகப் பிறந்தான். நாரதனார் ஒரு நாள் வந்து,
நல்வயிறு வாய்த்த குழந்தை கேட்ப, வேதத்தில் ஒரு கீதம் பாடி வாழ்த்தினார்.
தேவி திருமகனைக் கருஉயிர்த்தாள். அனைவரும் குதூகலத்துடன்
ஆடினர், பாடினர். பி்ரகலாதன் எனப் பெயரிட்டனர்.
பூமங்கை, பார்மங்கை, போர்மங்கை, நாமங்கை - யாவரும் அவனை வளர்த்தனர். குழந்தைக்கு ஐந்து
வயது ஆனதும், இரணியன் அசுரகுருவான வெள்ளி என்னும் புரோகிதனை அழைத்து, ‘தெள்ளிய மா மறைகள்
ஓதுவி’ என, அவன் ‘இரணியாய நம’ எனத் தொடங்க, பாலன் ‘ஓ நமோ நாராயணாய நம’ எனச்
சொல்லி அம் மந்திரப் பெருமையையும் கூறலுற்றான். ஆசான் ஓடி, இரணியனுக்குக் கூற, இரணியன்
அழைத்துக் குழந்தையிடம் அன்போடு கேட்கவும், குழந்தை முன் கூறியதையே ஒப்புவித்தது. இரணியன்
தன் பெருமையையும், நாராயணன் பகைமையையும் கூறியும் பிரகலாதன் அசையவில்லை. அவன் பக்தி
மேலும் ஆழமாக வேர் ஊன்றியது.
இரணியன் வெகுண்டு, மகனை ‘எற்றுமின்’, ‘எடுத்து
எறிமின்’, ‘கொண்மின்’ என, வீரர் பலர் அவனை வளைத்து, அடித்து, பிடித்து, பழித்து, அதிர்த்து,
படைக்கலம் எறிய, இக்கொடுமையைக் கண்டு அவ் ஊர் மகளிர் அரற்றினர், ஏங்கி, இரங்கி அழுதனர்.
இப்பகுதி வேறு பிரகலாதக் கதைகளில் காணக் கிடைக்காதது. வான் அழுத, மண் அழுத, குன்று அழுத, அவ்
அழுகை இன்னம் ஓயவில்லை; மழையாக, ஆறாக, அருவியாகக் காண்கிறோம்.
களிற்றின் முன் இட்டும், பாம்புகளால் கடிப்பித்தும்,
தீயிடைப் போட்டும், நஞ்சு அருத்தியும், மாளிகைத் தலையினின்று தள்ளியும், கடலிடை ஆழ்த்தியும்,
மாயம் வகுத்தும் அவன் சாகவில்லை. அமலனை அபயம் வேண்டி நின்றான்.
|