இரணிய வதைப் பரணி

20

இறுத

    இறுதியில் இரணியன் சிறுவனை வரவழைத்து, ‘இறைவன் ஆகில், அவன் எங்குளன், இயம்புக’ என, சிறுவன், ‘பூவில் வாசம் எனவும், பொழில் நீழல் எனவும், புறத்தினும் அகத்தினும் உளன்; யாவர் பாலும் ஒருகாலும் ஒழியாமல் உளன்’ என்ற பொழுது, ‘அவ்வாறு அவன் இன்றேல் நின் உடல் குருதி என் உடல் நிறைப்பன்’ என இரணியன் உரைத்தான். மகன், ‘( நான் கூறியது ) தவறின், என்தன் ஆருயிர் முடிப்பென்’ என்றான். இரணியன் ‘நன்று, நன்று’ எனா நடுவு நின்றதொரு தூணைப் புடைப்பத் தோன்றிற்று நரசிங்கம்.

    ‘மொகு, மொகு’ எனும் ஒலி முதல், தூணின் பிளவு, அங்குள்ளோர் உற்றது, அவுணர் இரிந்தது, யாவும் அழகாக வடிக்கப்பட்டுள்ளன. பொருளுக்குப் பொருந்தும் ஒலி உடைய சொற்கள் மிகவும் பயிலும். நரசிங்கத்தின் வெளிப்பாடு இவ் இலக்கியத்தில் சிறந்த பகுதி. இரணியன் அப்போதும் அஞ்சவில்லை. தேவர்களை மேலும் எள்ளி நகையாடுகிறான்; திருமாலை இழித்துப் பேசுகிறான்; போருக்கு எழுகிறான்.

    இப்பகுதியின் பல இடங்கள் கம்பனுடைய இரணியன் வதைப் படலத்தின் எதிரொலி. அடிக் குறிப்புக்களைக் காண்க. இப்பகுதியில் பிரகலாதன் நிலை சாந்த ரஸத்தையும் ( அமைதிச் சுவை ), இரணியன் நிலை ரௌத்ர ரஸத்தையும் ( வெகுளிச் சுவை ) காட்டுவன.

12. போர் பாடியது ( தாழிசைகள் 439-597 )

    இதுவும் இதற்கு அடுத்து வரும் பரணிக் கூழ்ப் பகுதிகளுமே காவியத்தின் சிறப்பு நிகழ்ச்சிகள். இங்குப் போரையும், பேய்க் கூத்துக்களையும் நேரில் காண ஆசிரியர் நம்மைப் போர்க்களத்துக்கு அழைத்துச் செல்கிறார். பல பயங்கரக் காட்சிகள் உள.

    நரசிங்கம் “எவர் இறை இனி உலகுக்கு?” என இருந்த பெருந் திறலோனைக் கண்டு சிரித்தது; எழுந்தது; முக்கோடி தானவரைத் தன் கூரிய நகத்திலே கோத்து எடுத்தது; மாநகரை ஒழித்தது; பரிகளையும், கரிகளையும் கால்களால் மிதித்து, உழக்கித் தரைப்படுத்தியது. வஞ்சினம் கூறி எழுந்த சேனைத் தலைவன் சம்பரனை அழித்தது.

    நரசிங்கம் புரிந்த போர் முழுப் போர். பல தாள்களால், பல கரங்களால், பல ஆயுதங்களால், பல உலகங்களில், பல கோடி மக்களை அழித்தது.