இரணிய வதைப் பரணி

21

    யாவும் அழிந்த பின், தன்னை நோக்கி வருகின்ற நரசிங்க வடிவை நோக்கி, இரணியன் எயிறு எரிய, நகை புகைய, நயனச் செந்தீ எண் திசையும் பரந்தெரிய, வாளொடு கேடகம் சுழல, வருவான். அதைக் கண்டு பிரகலாதன் இடை விலக்கி இனியேனும் “இறைவன் நீ; என் உயிர் நின்னுடையது என்னில், இன்னமும் நின் பிழை பொறுக்கும்” என இறைஞ்சினான். இவ் இடை விலக்கு கம்ப இராமாயணத்திலோ, வேறு நூல்களிலோ, காணாததொன்று. இவ் உரை கேட்டு இரணியன் நகைத்தான். ‘இவனை மலைப்பன்’ என அடன்று எழுந்தான். இரணிய - நரசிங்கப் போர் மிகக் கொடிது. இரணியன் ஏவின ஆயுதங்கள், தேர், களிறு, குதிரை, ஆள் படைகள், சம்பரன் மாயை, யாவற்றையும் நரசிங்கம் தன் கை, கால், நகம் ஆகிய உடல் உறுப்புக்களாலே அழித்தது; மலையிலும், விண்ணிலும், மண்ணிலும் போர் நிகழ்ந்தது.

    இறுதியில், இரணியன் இமயமலையிடை மறைய நரசிங்கம் அவனுடைய எரி அனைய சுரிகுஞ்சி பற்றி ஈர்த்துச் சுழற்றியதைக் கவி கூறும் பாடல்கள் ஒவ்வொன்றும் உயிருள்ள சொல் ஓவியங்கள். அவனை மடிமேல் இட்டு, நகங்கள் அவனுடைய மார்பில் பதிய, குடல் கோர்த்து எடுத்துக்கொன்றது. அப்போதும் சினம் தணியாது, எங்கெங்கோ சென்று ஒளித்த அசுரரை நாடிச் சென்ற திருக்கைகளின் வரவு பார்த்திருந்தது.

    தந்தையைத் தன் கண்ணெதிரே கொல்லக் கண்டும் இறையும் தளர்வுறாது தெளிவு பார்த்துச் சிந்தையும் தானுமாய் நின்றான் திருமகன்.

    நரசிங்கத்தின் சீற்றம் மாற்ற, பிரமன் திருமகளை ஏவினான் எனக் கம்பன் போக்கை இவ் ஆசிரியர் பின்பற்றுகிறார். பிரகலாதன் துதியும் அவ்வாறே. நரசிங்கம் சீற்றம் தணிந்து, பிரகலாதனை “ஊழி நாள் வாழி” என, நாயனார் தாம் தம்முடைய கரதலத்தால் தடமகுடம் தாங்கி அவன் தலைமேல் வைத்தார். பிரகலாதன் அறம் திருத்தி, மறை தழைக்க, அமரர் எலாம் களி கூர, அநேகம் காலம் மறந்திருந்த வாய்மை நெறி வழுவாமல் ஆண்டான்.

    “ஆனபடி, இது” என இந் நீண்ட கதையை முதுபேய் கூற, அன்னையும் அலகைகளும் முகமலர்ந்து அகமலர்ந்தன.