இரணிய வதைப் பரணி

24

5

5. பரணிப் புகழ் பெற்ற போர்கள்

    வெற்றி எவர்பாலதாயினும், போர் மனிதகுலத்தின் அழிவுக்கு ஒரு காரணம். போர் நிகழும்போது, பலர் மடிகின்றனர்; நாடுகள் அழிகின்றன; நெடுங்கால உழைப்பின் பயனாக உண்டான செல்வங்கள் பாழாகின்றன. இவை அனைத்தினும் கொடியது ஒழுக்கக்கேடு; வாய்மையின் சிதைவு; சமூக நியதியின் தடுமாற்றம். பருப் பொருட்களின் அழிவு ஓரளவு அளக்க உரியது; ஒழுக்கக் கேடும், சிதைவும், தடுமாற்றமும் ஆய்ந்து உணர்வோர்க்கன்றிப் புலப்படா. பண்பு அழிவின் விளைவுகள் பல தலைமுறைகளுக்குத் தொடரும்.

    போர்கள் சமூகமாறுதலை ஊக்குகின்றன. மாறுதல் எப்போதும் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. ஆயினும், மக்கள் உடன்பாடு இன்றி, வன்முறையால் மாறுதலை வழிப்படுத்தல் அரிது. போரும் அழிவும் ஓய்ந்தாலும், வன்முறை ஓயாது. ஆக்கத்திற்குப் பயன்பட வேண்டிய மாறுதல் அழிவுக்குப் பயன்படும். எக்காரணங்களால் போர் நடந்தது என்பதை மக்கள் மறந்து விடலாம். எத்தகைய சமூக மாறுதல் வேண்டும், புது சமூகத்தை எம் முறையில் இயக்கவேண்டும், என்பனவற்றை அறிந்து அமைக்கும் ஆற்றல் உள்ளவர் போரிலோ, அதன்பின் உண்டாகும் சூழலிலோ, அழிந்துபோவதாலும், அன்றிக் கருத்துக்கள் சிதைந்து மாறுவதாலும், முன்பு எதிர்பார்த்த மாறுதலுக்கு முரண்பட்ட நிலைமை போருக்குப் பின்பு உண்டாகலாம்.

    போரின் குறிக்கோளையும் வெற்றியையும் காளிதாசன் மூவகைப்படுத்திக் குறிப்பிடுகிறார். ரகுவம்சம் ( 4 : 43 )

1. தர்மவிஜயம்:

    வெல்லப்பட்ட நாட்டை அழிக்காது, அங்குள்ள செல்வம் அழியாது, தோற்றோருடைய பொருளைக் கொண்டு யாகம், தானம் போன்றவற்றால் மக்களுக்கு நன்மை செய்வது. அக்காலத்தில், யாகம் பொருள் பங்கீட்டுக்குச் சாதனமாக அமைந்திருந்தது. அறப்போரால் ஈட்டிய பயனை மக்கள் துய்த்தனர்; பொருள் மேல் உள்ள உரிமைகளைச் சமூகக் கொள்கைகளுக்கு ஏற்ப மாற்றி அமைக்கப் போரும், அதைத் தொடர்ந்த யாகமும், சாதனங்கள் ஆயின.

2. லோப விஜயம்:

    அரசன் பேராசையால் உந்தப்பட்டு, பிறர் பொருளை நயந்து, போர்புரிந்து வென்ற நாட்டையும் பொருளையும் தனக்கும் தமர்க்கும் கொள்வது.