இரண
இரணிய வதைப் பரணி ஆசிரியர் கம்பனை ஒட்டியே
தன் கதையைக் கொண்டு செல்கிறார் என முன்பு கண்டோம். அக்கருத்தைத் தொடருமுன் வைணவக் கோட்பாடுகள்
சிலவற்றைக் குறிப்பிடவேண்டும்.
1. பொருள்களின் பாகுபாடு : அறிவு, புலன்நுகர்வு. உணர்ச்சி,
உயிர் இவற்றை உடையன ( சித் ); இல்லன ( அசித் ); இவற்றை இயக்குபவன், இவை இயங்கக் காரணமானவன்,
இவற்றின் தலைவன் ( ஈச்வரன் ); இம் மூன்றும் வெவ்வேறானவை.
2. ஈச்வரன் எல்லாப் பொருள்களையும் தன்
இருப்பிடமாக உடையவன்; எல்லாப் பொருள்களுக்கும் ஆதாரமானவன். அதனால் நாராயணன் எனப்படுகிறான்.
3. பொருள்கள் தோற்றமும் முடிவும் அற்றன; என்றும்
இருந்தன; இருப்பன; அழியாதன. நாராயணனும் அவ்வாறே.
4. உடல்வேறு; உயிர்வேறு. அவை இரண்டிலும் நாராயணன்
உளன்; இரண்டும் நாராயணனுக்கே உரியன. ( தேற்றேகாரம் கவனிக்க வேண்டியது ) வேறு எவருக்கும் எப்போதும்
எந்த நிலைமையிலும் உரியன அன்று. இப் பொது விதி மனிதகுலம் மட்டும் அன்றி, புள், விலங்கு, தாவரம்,
நிலம், தீ, நீர், வளி, விண் யாவற்றுக்கும் அமையும்.
5. நாராயணன் எங்கும், எப்பொழுதும், எவற்றினும்
இருப்பதால் பொருள் அனைத்துக்கும் அவன் பொதுக் கூறு. அக்கூறினைப் பொருளினின்று பகுக்கவோ,
பிரிக்கவோ முடியாது. பொருள்களின் முழுமையிலும், அதைக் கூறிட்ட பகுதி ஒவ்வொன்றிலும், நாராயணன்
உளன்.
6. பொருள்களின் இப் ‘பொது உடைமை’யை, பொதுமையை,
அழித்துத் ‘தனி உடைமை’ ஆக்க முற்படுவோன் திருடன். திருட்டுக்கு உரிய தண்டனையை அவன் பெற வேண்டும்.
7. தன் உயிரும் உடலுமே
தனது ஆகாதபோது, நாராயணனுக்கே உரிய பிற உயிரையோ, உடலையோ, அரசனோ, தந்தையோ தனது எனக்
கோற முற்படுவது குற்றம்; இயலாததும்கூட. நாராயணனே ஒரு உயிரை ஏற்க முடியும்.
|