இரணிய வதைப் பரணி

28

இக

    இக்கருத்துக்களுடன் முரண்பட்டான் இரணியன்.  பொருள்கள்மேல் மட்டும் அன்றிக், கருத்துக்கள் மேலும், சொல்லின் மேலும், தன் ஆணையைச் செலுத்த முயன்றான்; அம்முயற்சி தகாது, இயலாது, எனப் பிரகலாதன் இடித்துரைத்தும் அவன் ஏற்கவில்லை.

    நரசிங்கம் தோன்றி அவுணரை அழித்த பின்பும் பிரகலாதன் தந்தையின்பால் வேண்டுவது “இறையவன் நீதான் பிழைத்தது எல்லாம் நிற்க, இத்தை ஒழித்து, ஒருகால் அஞ்சலித்து, நீ இன்று ‘இறையவன் நீ, என் உயிர் நின்னுடையது’ என்னில், இன்னமும் நின் பிழை பொறுக்கும்” என்பது (தாழிசை 550). தன்னை இறையவன் என்று இரணியன் கருதி இருந்தான். இறையவன் வேறுஒருவன். அவன் இரணியனிடத்தும், பிரகலாதனிடத்தும், மற்றும் எவ்விடத்தும் உள்ளவன். அவனுக்கு உரிய தன் உயிரை அவனுடையது என்று இப்போதேனும் சொன்னால், அவ் இறையவன் உன் திருட்டுப் பிழையைப் பொறுப்பான். இதுவே, இக்காவியத்தின் அடிப்படைக் கருத்து.

    இதைத் திருட்டு என இரணியன் உணரவில்லை. தன் உயிர் மட்டுமா? மன் உயிர் அனைத்தும் தன் உடைமையாகவே கருதினான். ‘பதினாலு புவனம் பொது அழித்து’ (தாழிசை 244)த் தன் உடைமை’யாகவே கருதினான். இக் கருத்தால் உண்டானது அவனுடைய ‘சொற்ற நாவையும் கருதிய மனத்தையும் சுடும் ஒற்றை ஆணை’! இக்குற்றத்தை ‘ஆத்ம அபஹரணம்’ - தன்னைத் திருடுதல் - என்பர்.

    பிரகலாதனைக் கொல்ல முற்பட்டது மடமை. அழியாத உள்ளத்தையும் கருத்தையும், கொடுமையும் அச்சுறுத்தலும் எவ்வாறு அழிக்க முடியும்?

    பிரகலாதனுடைய உறுதி ‘எங்கும் நாராயணன் உளன்; யாவும் நாராயணனுடையது’ என்பது. எங்கும் தங்குவதால் நாராயணத்வம் உலகப் பொது. அதை நிரூபிக்க வேண்டியிருந்தது ஒரு தூணில். தூணாவது வடிவம் உடையது. வடிவமே இல்லாத ‘நீ சொன்ன சொல்லினும் உளன்’ என்பது பிரகலாதனுடைய உறுதி. 

    உயிரைத் தாங்கிய உடல் என்னும் சிறையை நரசிங்கம் அழித்தது என்கிறார் பரணி ஆசிரியர் (தாழிசை 574) பொதுநின்ற உயிர்த்தொகுதிகளில் ஓர் உயிர் சிறுகூறு. பொதுவாக உள்ள உயிரை, அறிவை, சொல்லை, தனி ஒருவனுடைய உரிமை எனக் கொண்டதே இரணியனுடைய அழிவுக்குக் காரணம்.