இரணிய வதைப் பரணி

29

ஆன

    ஆனால், உடன் உள்ளோரையும் ஏன் நரசிங்கம் அழித்தது? கொடுங்கோன்மையைப் பொறுத்திருப்போரும் தண்டனைக்கு உரியவர்; அவர்கள் தம் பொறையால் கொடுங்கோன்மையை வளர்க்கிறார்கள். இத்தகைய சகிப்புத் தன்மையே கொடுங்கோன்மையின் உணவு. பொறுமை கொடுங்கோன்மையைப் பரப்புகிறது. சமூகத்தில் வேறொருவனுக்கு இழைக்கப்படும் அநீதியை, கொடுமையை எதிர்க்காதது அவ் அநீதிக்கு, கொடுமைக்கு, உடந்தை ஆகும். மேலும் பொதுநின்ற உயிரை இரணியனுடையது என ஒப்புக்கொண்டதும் அச் சமூகத்தினர் இழைத்த குற்றம். கொடுங்கோன்மையை முளையில் கிள்ளாதது, கிள்ள முனையாதது, ஏற்றுக் கொண்டது அச்சமூகத்தில் ஒவ்வொருவரும் தனித்தனி செய்த குற்றம். ஆதலின், அவர், அச்சமூகம், அழிய வேண்டுவதே; இது அறம். இவ் அழிவு நேருங்கால், பல தீயோருடன் சில நல்லோரும் அழிவர்; எஞ்சியோர் புது சமூகத்தை உருவாக்குவர்.

    இவ் அழிவுக்கு நரசிங்கம் கழிவிரக்கப் படுவதைப் பரணி ஆசிரியர் கூறுகிறார்: “தாதையை நீயும் காணச் சலத்தினால் தவறு செய்த பேதமை நம்பால் உண்டு; பிழையை நீ பொறுத்தி” (தாழிசை 592) எனப் பிள்ளையிடம் வேண்டுவது நரசிங்கத்தின் பெருந்தன்மையைக் காட்டும். ‘இனிப் பிழை செய்தாரேனும் நின் குலத்துளார் தம்மைக் கொன்று உயிர் களைகிலோம்’ (தாழிசை 593) இது கழிவிரக்கத்தால் நரசிங்கம் பிரகலாதன் கேட்காமலே தந்த வரம்.

    இவ் விடத்து, பிற பரணிகளில் உள்ள வெற்றிப் போதையை நாம் காணவில்லை; காண்பது ‘ஆறும், சீர் ஒழுகு சான்றோர் சினம்; அமைதிச்சுவை (சாந்த ரஸம்). இது பிற பரணிகளில் காணாதது.

    தாதையைத் தனயன் காணக் கொன்றால் என்? காணாமல் கொன்றால் என்? நீதித் தேவன் கண் எப்போதும் கட்டியே இருக்கும். தவறு ஒறுக்கப்படவேண்டுவது. அதற்கு இக்கதை எடுத்துக்காட்டு.

    மற்றோர் கோணத்திலிருந்து பார்க்கும்போது, பிரகலாதன் தந்தை நிலைநாட்டியதாகக் கருதிய சமூகத்தை ஆட்டிய வீரன். தந்தையின் செருக்கையும், சொல், கருத்துத் தடைகளையும் எதிர்த்தவன். கொள்கைப்பற்று உடையவன்; தன் கொள்கைக்காக எத்துணை அல்லலையும் ஏற்கும் மனத்திண்மை வாய்ந்தவன். பிரகலாதன் போற்றற்கு உரியவன்.