6
6. பரணிப் போக்கு
உலகத்தின் பல பகுதிகளிலும் இருந்த சமூகங்களின் வரலாற்றுக்கு
முந்தியகாலம் நீண்டதொன்று. அக்காலத்தைப் பற்றிய குறிப்புக்கள் சிலவே; ஆங்காங்கு தென்படும்
எலும்புக் கூடுகள், உடைந்த சில்லுகள், கற்கள், ஆயுதங்கள் போன்றவற்றால் அக்கால வாழ்க்கையை
யூகிக்கத்தான் முடியுமே அன்றி வரையறுக்க இயலாது.
அதன்பின் வரலாற்றுத் தொடக்கம் வரை இருந்த காலம்
அத்துணை நீண்டதன்று. அப்போது மக்களுடைய வாழ்க்கை விலங்குகளைப் போன்றதே. வாழ்க்கைப்
போர் தொடர்ந்து நடந்துகொண்டே இருந்தது. தம் உடல் வலிமையாலும், மதி வலிமையாலும் இயற்கையை
வென்றும், இயற்கை அமைப்புக்களான கனல், காற்று, நீர் போன்றவற்றையும், விலங்குகளையும்
வாழ்க்கைக்குப் பயன்படுத்தியும், குடி உயர உதவினோர் சிலர் இருந்தனர். அவர்களைத் தலைவராகக்
கொண்ட கதைகள் பல மக்களிடை பரவலுற்றன. மிடுக்குடையவன் வீமன்; வில் ஆற்றல் நிறைந்தவன்
விசயன், இராமன்; சூலம் வல்லோன் சிவன்; வேல் வல்லோன் கந்தன்; கொடைவளம் கொண்டவன்
கருணன்; குதிரைகளை அறிந்தவன் நகுலன்; வானநூல் அறிந்தவன் சகதேவன்; மருந்து அறிந்தவன் தந்வந்த்ரி;
மொழி நூல்வல்லோன் அகத்தியன்; பசுக்கள் அறிந்தவன், இராஜ தந்திரம் அறிந்தவன் கண்ணன்;
யாகம் யக்ஞங்களை அறிந்தவர் வஸிஷ்ட வாமதேவாதி ருஷிகள்; உண்மையை அறிய முயன்றவர் யாக்ஞ
வல்கியர், சனகர்; எனச் சீரியோர் பலர் இருந்தனர். நாளடைவில் அவர்களை ஒட்டி எழுந்த கதைகள்
புராண இதிகாசங்களாக வளர்ந்தன. அச்சீரியோரைத் தலைமகனாகக் கொண்ட கதைகள் காட்சியாலன்றிக்
கேள்வி வாயிலாகத் தோன்றிக் கவிதைச் சிறப்பாலும், நம்பிக்கை வலிமையாலும், உண்மை எனவே
மக்கள் நம்பும் அளவுக்குப் பெருகின. இருளும் இன்றி, ஒளியும் இன்றி மங்கலான காலத்தில் இத்தகைய
ஊக்க கதைகள் பல தோன்றின. கவிஞர் பரம்பரை முன்னோர் மொழிந்த மரபைப் போற்றி, அதற்குப்
புது அழகு தந்து, தம் சித்தாந்தக் கருத்துக்களுக்கு இக்கதைகளை நிலைக்களன் ஆக்கியது. அவற்றுள்
ஒன்று இம்மானுட மடங்கல் கதை.
தக்கன் கதை தனி ஒருவனுக்கு, ஒருத்திக்கு இழைக்கப்பட்ட
அபராதத்தை ஒறுக்க எழுந்தது. இரணியன் கதை மனித குலத்துக்கு இழைக்கப்பட்ட அபராதத்தை ஒறுக்க
எழுந்தது. கலிங்கத்துப் பரணியோ வரலாற்றுக் காலத்தில் தனி அரசை மகிழ்விக்கத் தோன்றியது.
|