இரணிய வதைப் பரணி

31

இரண

    இரணிய வதைப் பரணியில் வெற்றி கொண்ட தலைவன் நரசிங்கம் ஒருவனே. அவனோடு உடன் இருந்த வீரர் எவரும் இலர். இதைக் கடைத்திறப்பு, போர் பாடிய பகுதிகளால் காண்கிறோம். கலிங்கத்துப் பரணியில் கருணாகரனுடன் சென்ற சேனைக்கும், தக்கயாகப் பரணியில் வீரபத்திர தேவர் கணங்களுக்கும், வெற்றியில் பங்கு உண்டு. இப்பரணியில் நரசிங்கத்துக்கே
உண்டு.

    இரணிய வதைப் பரணியில் திருஅவதாரப் பகுதி பிரகலாதனது; அவன் காவியத் தலைவனும் அல்லன், எதிர்த் தலைவனும் அல்லன்; அவன் இரணியன் வீழ்ச்சிக்கு ஒரு நிமித்தமாக மட்டுமே உள்ளவன். பரணியில் பாதிக்கு மேல் பிரகலாதன் கதை. கலிங்கத்துப் பரணியில் திருஅவதாரம் சோழ மன்னன் குலோத்துங்கனுடைய புகழ்விரிப்பது. ஆனால், போர் புரிந்தவனோ அவன் ஏவிய படைத் தலைவன், கருணாகரத் தொண்டைமான். தக்கயாகப்பரணியில் திருஅவதாரம்இல்லை. சிவபெருமான் வீரபத்திரத் தேவரை ஏவினார். நரசிங்கம் பிறர் ஏவல் இன்றித் தன் விருப்பால் தோன்றியது; தன் விருப்பால் போரிட்டது.

    பிரகலாதன் தன் தந்தையாரிடம் போர்க் களத்தில் அவர் இழைத்த பிழையை ஏற்க மன்றாடுவது இப்பரணிக்குப் புதிது. மற்ற பரணிகளில் இம்மன்றாடல் இல்லை. அவ்வாறே, வெற்றி கொண்ட நரசிங்கம் தன் அழிவுச் செயல் பிழை எனவும், அப்பிழையைப் பொறுத்தி எனவும், பிரகலாதனிடம் இரப்பது இப்பரணிக்கு மட்டுமே உரியது. மற்ற பரணிகளில் இந்நிகழ்ச்சிக்கு இடம் இல்லை.

    படைகள் சூறையாடியதையும் அழித்ததையும் பிற பரணிகளில் காணலாம். இரணிய வதைப் பரணியில் நரசிங்கம் போர் முடிந்ததும் அமைதியாகத் திரும்பச் செல்லுகிறது. சாந்த ரஸம் பிற பரணிகளில் இல்லை. இரணிய வதைப் பரணியில் ஒறுத்தலையும் அருளலையும் காண்கிறோம். பிறவற்றில், ஒறுத்தலே அன்றி அருளல் இல்லை.

    போர்க்காரணம் ஒவ்வொரு பரணிக்கும் இன்னதென முன்பே ஆராய்ந்தோம். இரணிய வதை ஓரளவு “தர்ம விஜயம்” ஆகலாம். பிற அசுர, லோப விஜயங்கள்.