இரணிய வதைப் பரணி

41

13

13. பதிப்பு வரலாறு

    கிடைத்த பிரதியின் தொடக்கத்தில் காணப்படும், ‘தேனறா மகிழ்த் தொடையலும்’ என்ற நம்மாழ்வார் துதி பல நூல்களின் தொடக்கத்திலும் காணப்படுகின்றது. அப்பாட்டை இந்நூல் ஆசிரியர் இயற்றினாரா, அன்றி, ஏட்டை எழுதியவர் தம் எழுத்துக்குக் காப்பாகப் பழம் பாட்டைத் தாமே எடுத்து எழுதினாரா என்பது தெரியவில்லை.

    ஏட்டின் இறுதியில்,

    “அசாஅ-ம் ஆண்டு நந்தன   கார்த்திகை மீ ருஉ புந்தி வாரமும் அமரபக்ஷத்திரமும் திரிதிகையும் திருவாதிரை நக்ஷத்திரமும் பெற்ற தினத்திலே திரு நகரியிலிருக்கும் பெரிய திருவடி இரணியன் வதைப் பரணி எழுதி முடிப்பித்தது. பெரிய திருவடி திருமேனி கவிராய குருவே நம:

    அசாஅ-ம் ஆண்டு நந்தன  புரட்டாசி மீ அ உ சோம வாரமும் அசுவதி நக்ஷத்திரமும் பூர்வ பட்சத்துப் பஞ்சமியுமாக நாட்கொண்டது.”

    என்ற குறிப்புக் காணப்படுகிறது. கொல்லம் ஆண்டு 898-ம் ஆண்டு கார்த்திகை மாதம் கிருஸ்து சகாப்தம் 1724 நவம்பர் மாதம். இவ் ஏடு எழுதியவர் நந்தன ஆண்டு புரட்டாசி மாதம் 8-ந் தேதி, தொடங்கி ஏறத்தாழ இரண்டு மாதங்களில் ஏடு எழுதி முடித்து இருக்கலாம். ஏடு எழுதியவர் பெயர் பெரிய திருவடி, அவருடைய ஆசிரியர் பெரிய திருவடி திருமேனி கவிராயர் என்று இருக்கலாம்.

    திருநகரி என வைணவர் வழங்கும் ஊர்கள் இரண்டு: சோழ நாட்டில் திருமங்கை ஆழ்வார் பிறந்த திருவாலி திருநகரி; பாண்டிய நாட்டில் நம்மாழ்வார் பிறந்த ஆழ்வார் திருநகரி. ஆண்டு, தென்பாண்டி நாட்டில் வழக்கில் இருந்த கொல்லம் ஆண்டு என்பதில் ஐயமில்லை. ஆதலின் ஏடு எழுதியவர் தென்பாண்டி நாட்டார் ஆகலாம்.

    இந்நூலுக்கு மூல ஏடு இப்போது கிடைக்கவில்லை. 1904-ம் ஆண்டில் கோயம்புத்தூரைச் சார்ந்த பூளைமேட்டிலிருந்த மகா வித்வான் புது மு. வேணுகோபாலசாமி நாயுடு அவர்கள் ஏதோ ஒரு ஏட்டிலிருந்து காகிதப்பிரதி செய்வித்தார். அக் காகிதப் பிரதி இப்போது கல்கத்தாவில் உள்ள நாட்டுச்சுவடி நிலையத்தில் இருக்கிறது. அப்பெரியார் ஏட்டிலிருந்து எழுதுவித்த பிற நூல்கள்: மாறன் அலங்காரம், குருகாமான்யம், கூடல் புராணம் என்பன.