ஐக
ஐகாரக் குறிக்கும் ‘ன’ கரத்துக்கும் வேறுபாடு கொண்டதாகத்
தெரியவில்லை; ‘ள’ கர ‘ழ’ கர பேதம், இடையின ‘ர’ கர வல்லின ‘ற’ கர பேதம் புலப்படவில்லை.
‘ன’ கர ‘ண’ கர பேதமும் அவ்வாறே. வடிவம் முற்றிலும் இருப்பதாகத் தோன்றினாலும் பொருளமைதி
கிடைக்கவில்லை.
சந்தப்போக்கு தளைதட்டிய இடங்கள் பல. எங்கும்
நிறுத்தல் குறிகளோ, காவிய உடபிரிவுகளோ காணப்படவில்லை. ஏட்டைத் திருத்தியோ, குறைகளை நிரப்பியோ,
வெளியிட்டால், நூலாசிரியர் கருத்து யாது என, வேறு பிரதி கிடைக்கும் காலத்தில், படிப்போருக்கு
ஐயம் எழலாம்; திருத்தாமல் வெளியிட்டால், இன்று படிப்போருக்கு விளங்காமல் போகலாம். இவற்றை
ஓர்ந்து, தாழிசைகளை ஓரளவு ஒழுங்கு படுத்தி, வேண்டிய இடங்களில் எழுத்துக்களையும் அசைகளையும்,
ஓசை மாறுபடும் சில இடங்களில் சீர்களையும், மட்டுமே, அறிஞர் கருத்துக்கு இணங்க, திருத்தி
வெளியாவது இந்நூல்.
நூல் செம்பாகமாக அமைந்தது; எனினும், சந்திபிரித்த
பதிப்பு பயில்வோருக்குப் பயன்படும் என்ற காரணத்தால், சீருக்குள்ளும் சந்திபிரித்தே எழுதப்பட்டுள்ளது.
இதனால் சில இடங்களில் சீர்கள் தெளிவாக அமையவில்லை: அங்கு, ஓசை நயம் கருதிப் படிப்போர்
சீர்களை அமைக்க வேண்டும்.
மேற்கோள் தரப்பட்ட இடங்களிலும், சொல் தொடர்களை
விளக்கவுமே அடிக்குறிப்பு தரப்பட்டுள்ளது; அரும் சொற்களின் பொருள் பிற்சேர்க்கையில் காணலாம்.
பல ஆண்டுகளாக அடியேன் சிந்திக்கத் தித்தித்தது
இந்நூல். ஆனால், புத்தகமாக வெளியிடக்கூடிய அளவு இந்நூலை உருவாக்கித் தந்தவர் புலமைசான்ற திருவாளர்
T. K. இராமாநுச ஐயங்கார், அப் பெரியார் தந்த
பாடமும் பொருளும் அடியேனுக்குத் துணை நின்றன.
அருட்புலவர் அரங்க சீனிவாசன்
நூலைப் பெயர்த்து எழுதியும், பல சிதைவுகளை நிரப்பியும்,
அணிகள், தொடை நயங்கள் போன்றவற்றைத் தொகுத்தும் உதவினார்.
நூல் பதிப்பிக்கும் அவா எழுந்த காலத்திலிருந்து
இப்பணி முடியும் வரை ஊக்கிவந்த புலவர்கள் திருவாளர் பெ. ராமாநுஜம்
திருவாளர் S K. இராமராஜன்.
|