இரணிய வதைப் பரணி

6

3

3. இரணியன் - பிரகலாதன் - நரசிங்கம் - கருத்தோட்டம் 

(அ) ஸம்ஸ்க்ருத நூல்கள் 

    இரணியன் - பிரகலாதன் - நரசிங்கம் பற்றிய குறிப்புகள் இதிகாசங்களிலும் புராணங்களிலும் பல இடங்களில் உள. 

    வால்மீகி இராமாயணத்தில் காணப்படுவது :- கச்யபனுடைய இரு மனைவிகள் திதி, அதிதி என்பவர். திதியின் மக்கள் தைத்யர்; அவர்களுடைய தலைவன் பிரகலாதன். அவன் மகன் விரோசனன்; அவன் மகன் பலி. கச்யபனும் அதிதியும் சித்தாச்ரமத்தில் தவம் புரிந்து மகாவிஷ்ணுவை வாமன உருவத்தில் தம் மகனாகப் பெற்றனர். அவ் வாமனன் தேவர் குறை இரப்பத் தனக்குப் பல தலைமுறைகளுக்குப் பின் தோன்றிய பேரன் முறையினன் ஆகிய பலியிடம் மூவடி மண் இரந்து, மூவுலகும் ஈரடியால் அளந்து, அவற்றை இந்திரனுக்குத் தந்தான் ( பாலகாண்டம் 30, 46-ம் சருக்கங்கள் ). இந்நூலில், பிரகலாதனுடைய தந்தை எனப்படும் இரணியனைப்பற்றியோ நரசிங்கத்தைப்பற்றியோ குறிப்பு ஒன்றும் இல்லை.

    வியாஸ பாரதம் ஸபா பர்வம் 38-ம் அத்தியாயத்துக்குப்பின், தென் நாட்டில் வழங்கும் படிகளில், உள்ள கதை வருமாறு:-

    பிரமன் மக்கள் கூட்டம் பெருகவும், மக்களுக்கு ஒழுக்கம் புகட்டவும், பத்து பிரஜாபதிகளை உண்டாக்கினான். தக்ஷன் அவர்களுள் ஒருவன். தக்ஷனுடைய ஐம்பது பெண்களில் ஒருத்தி திதி. அவள் கச்யபனை மணந்து இரணியனைப் பெற்றாள். இரணியன் கடுந்தவம் இயற்றிப் பிரமனிடம் வரங்களைப் பெற்றான். அவ்வரங்களால், அவன் தேவ, அசுர, கந்தர்வ, யக்ஷ, உரக, ராக்ஷஸ, மானுஷ, பிசாசுகளால் கொல்லப்படான்; ருஷிகளுடைய சாபம் அவனைத் தீண்டாது; சஸ்த்ரம், அஸ்த்ரம், மலை, மரம், வெப்பம், குளிர் இவனைக் கொல்லா; வான், நிலம், இரவு, பகல், உள், புறம் எவற்றிலும் சாகான்; விலங்கு, பறவை, ஊர்வனவற்றால் இவனுக்கு ஊறு நிகழாது. இவ்வரங்களால் இறுமாந்து, இரணியன் இந்திரன், வருணன், ஆகிய தேவர்களை அவரவர் இடங்களினின்றும் ஓட்டிவிட்டு மூஉலகங்களையும் ஐந்துகோடி ஆண்டுகளுக்குமேல் ஆண்டு வந்தான். இதைப் பொறுக்காத தேவர்