இரணிய வதைப் பரணி

7

பிரமனைமுன்னிட்டுத் திருமாலிடம் முறையிட, திருமால் நரசிங்க வடிவு எடுத்துப் பகல் இரவு கூடும் சந்தியாகாலத்தில் இரணியனைத் தன் மடியில் கிடத்தி நகங்களால் மார்பைப் பிளந்து கொன்றார். இங்கு பிரகலாதன் பேச்சே இல்லை.

    இக்கதையை வீட்டுமன் யுதிட்டிரனுக்கு இராச சூய வேள்வியில் கூறுகிறார். கிருட்டிணனை இகழ்ந்த சிசுபாலன் முற்பிறவியில் இரணியன் எனவும் வேறோர் இடத்தில் மகாபாரதம் கூறும் ( ஆதி பர்வம் 67 : 5 ).

    இரணியன் பிரகலாதனுக்குத் தீங்கு இழைத்ததும், பிரகலாதனுக்குத் திருமாலிடம் உறுதியான பக்தியும் மகாபாரதத்தில் கூறப்படவில்லை; இரணியனுடைய ஆணவத்தை அடக்கி தேவர்களைக் காக்கவே நரசிங்கம் தோன்றியது.

    நரஸிம்ஹ வபு:” மானுட மடங்கல் வடிவன் என்பது மகாபாரதம் அனுசாஸன பர்வத்தில் வரும் திருமாலுடைய ஆயிரம் பெயர்களுள் இருபத்தோராவது பெயர்.

    இனி, புராணங்களைப் பார்ப்போம்.

    பாகவதம் ஏழாம் ஸ்கந்தம் இரணியன் கதையோடு தொடங்குகிறது. “அடியாருடைய பெருமையைக் கூறவும், மக்களுக்குப் பகவானிடம் பக்தி பெருகவும், நான் இக்கதையைச் சொல்லுகிறேன். . . . . . நாரதனாலும் ருஷிகளாலும் பாடப்பெறும் கதை. . . . . . . இராச சூய யாகத்தில், அஜாத சத்ரு ( யாருக்குப் பகைவன் என்று ஒருவன் இன்னம் பிறக்கவில்லையோ, அவன் ) வும் முனிவர்களும் கேட்டது; நாரதன் சொன்னது ( 7:1:4-12 )” என புராணத்தைக் கேட்டவர், சொன்னவருடைய பெருமைகளைக் கூறிச் சுகர் பரீக்ஷித் அரசனுக்குக் கூறும் கதை. அடியாருடைய பெருமையையும் பகவத் பக்தியையும் நிலை நாட்டுவதைக் குறிக்கோளாகக் கொண்டது.

    இரணியன் பிரமனைக் குறித்துத் தவம் இயற்றிப் பல வரங்களைப் பெற்றான். அவன் உடல் உடையவற்றுக் கெல்லாம் தனி அரசன் ஆனான். (‘ஏக பத்யம் ச தேஹினாம்’) இவற்றால் கர்வம் அடைந்து, எங்கெங்கு வேதம், இருபிறப்பாளர், வர்ணாச்ரம தர்மம் இவை ஓங்கி வளர்கின்றனவோ அங்கங்கு சென்று தீயிட்டு அழித்தான். தன்னையே சரண் என்று அடையாதவரைத் துன்புறுத்தினான்.

இரணியனுடைய மனைவி கயாது, மகன் பிரகலாதன். பிரகலாதன் அரி நாமம் ஓத, இரணியன் அவனைப் பல வகையில் துன்புறுத்துவதும், அவன் திருமால் திருவடிகளையே உறுதியாகப்