பக்கம் எண் :

194குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

244.
ரிமாகஞ் சிறுகக் குவித்து நிதிக்குவை
ஈகையி னேககழுத்த மிக்குடைய - மாகொல்
பகைமுகத்த வென்வேலான் பார்வையிற் றீட்டும்
நகைமுகத்த நன்கு மதிப்பு.    
(38)

245.
களைகணாத் தம்மடைந்தார்க் குற்றுழியு மற்றோர்  
விளைவுன்னி வெற்றுடம்பு தாங்கார் - தளர்நடைய  
தூனுடம் பென்று புகழுடம் போம்பதற்கே  
தானுடம் பட்டார்க டாம்.    
(39)

    244. பொருளீதலைக் காட்டிலும் நன்மதிப்போடு கூடிய பார்வையே சிறந்ததென்பர்,

    மாகம் சிறுக - ஆகாயப்பரப்பும் சிறிதாம்படி; சிறப்பும்மை விகாரத்தால் தொக்கது. நிதிக்குவையைக் குவித்து. ஈகையின் - அதனை ஈதலைக் காட்டிலும். ஏக்கழுத்தம் - தலையெடுப்பு; “ஏக்கழுத்தம் போல வினிதன்றே” (சீவக. 496.) மிக்குடைய எனப் பன்மையாற் கூறினார் மதிப்பின் பன்மை பற்றி. மாகொல் வேல் - யானைகளைக் கொல்லும் வேல். வென் வேல் - வெற்றியைத் தரும் வேல்; வென் - வெற்றி. (பி-ம்.) ‘வ்ள்வேல்’. பார்வையின் தீட்டும் - பார்த்தலால் எழுதும். நகைமுகத்த சிரிப்போடு கூடிய முகத்தையுடைய. தீட்டும் மதிப்பு என்க. நன்கு மதிப்பு ஈகையின் ஏக்கழுத்தம் மிக்குடைய என்க.

    வென்வேலா னென்றமையின் அரசனென்பது கொள்ளப்படும். அவனது நன்குமதிப்பினால் பலருடைய பாராட்டும் நல்லுதவியும் பெறுதலின் ஈகையினும் சிறந்ததென்றார்.

    245. புகழுடம்பு அடைதற்கு வழி இதனாற் கூறப்படும்.

    தம்மைக் களைகணாக அடைந்தார்க்கு; களைகண் - பற்றுக் கோடு. உற்றுழி - ஒரு துன்பம் நேர்ந்துவிடத்து. மற்றோர் விளைவு உன்னி - உடம்பால் அடையும் காம உகர்ச்சி போன்ற வேறோர் இழிந்த பயனைக் கருதி. வெற்றுடம்பு - பிறர்க்குப் பயன்படாத உடம்பை. ஊனுடம்பு தளர்நடைய தென்று; தளர் நடையது - அழியும் தன்மையுடையது. புகழுடம்பு - புகழாகிய உடம்பு. ஓம்புதற்கே யென்பதிலுள்ள ஏகாரத்தைப் புகழுடம்பென்பதனோடு கூட்டுக. புகழுடம்பு ஓம்புதற்கு உடன்பட்டார்கள் வெற்றுடம்பு தாங்கார். தான், தாம் : அசைநிலைகள். உடல் நீத்தேனும் பிறருக்கு உதவுவரென்றபடி. ததீசிமுனிவர், சிபி முதலியோர் வரலாற்றால் இந்த உண்மை விளங்கும்.