பக்கம் எண் :

198குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

252.
பழமை கடைப்பிடியார் கேண்மையும் பாரார் 
கிழமை பிறிதொன்றுங் கொள்ளார் வெகுளின்மற் 
காதன்மை யுண்டே யிறைமாண்டார்க் கேதிலரும் 
ஆர்வலரு மில்லை யவர்க்கு.    
(46)

253.
மன்னர் புறங்கடை காத்து வறிதேயாம்
எந்நலக் காண்டுமென் றெள்ளற்க - பன்னெடுநாட்
காத்தவை யெல்லாங் கடைமுறைபோய்க் கைகொடுத்து
வேத்தவையின் மிக்குச் செயும்.    
(47)

254.
உறுதி பயப்ப கடைபோகா வேனும்
இறுவரை காறு முயல்வ - இறுமுயிர்க்கும்
ஆயுண் மருந்தொழுக்க றீதன்றா லல்லனபோல்
ஆவனவு முண்டு சில.    
(48)

    252. பழமை - பழைய நட்பை. கிழமை - பழைய நண்பர் உரிமையாற் செய்வனவற்றை. “பழமை யெனப்படுவ தியாதெனின் யாதும், கிழமையைக் கீழ்ந்திடா நட்பு” (குறள், 801) என்பதையும் அதனுரையையும் பார்க்க. “புரைதவப் பயனோக்கார் தம்மாக்க முயல்வாரை, வரைவின்றிச் செறும்பொழுதிற் கண்ணோடா துயிர்வௌவும், அரைசு” (கலி. 8, 15-7.) வெகுளின் - கோபித்தால். இறைமாண்டாருக்குக் காதன்மையுண்டே? இறைமாண்டார் - அரசியலிலே மே்ம்பட்டார். காதன்மை - அன்பு. உண்டே யென்றது இல்லையென்றபடி. ஏதிலர் - அயலார். ஆர்வலர் - அன்பு செய்யப்பட்டவர். அவர்க்கு ஏதிலரும் ஆர்வலரும் இல்லை.

    253. புறங்கடையை வறிதே காத்து; வறிதே - யாதொரு பயனும் இன்றி. எந்நலம் காண்டும் என்று - எந்த நன்மையைக் கண்டோமென்று. எள்ளற்க - இகழாதொழிக. கைகொடுத்து - உதவி. வேத்தலையில் - அரசனுடைய சபையில். மிக்குச் செயும் - பிறரைக் காட்டிலும் மேம்பாட்டோடு இருக்கும்படி செய்யும். காத்தவையெல்லாம் மிக்குச்செய்யும்.

    254. இறக்கும் வரையிலும் முயற்சியுடையவனாயிருத்தல் வேண்டுமென்பது கூறப்படும்.

    உறுதி பயப்ப - நன்மையைத் தருவனவாகத் தாம் மேற்கொண்ட முயற்சிகள். கடைபோகா வேனும் - முடிவு பெறாவிட்டாலும். இறுவரை காறும் - தாம் இறக்கும் காலம் வரையிலும். முயல்ப - முயல்வார்கள். இறும்உயிர்க்கும் - அழியும் உயிருக்கும். ஆயுள் மருந்து ஒழுக்கல் - ஆயுளை நீடிக்கச் செய்யும் மருந்தை ஊற்றுதல். அல்லனபோல் ஆவனவும் சில உண்டு - முடிவு பெறாதனபோல் தோன்றி முடிவுபெறும் சில காரியங்களும் உண்டு. இடைவிடாமல் முயன்றால் ஆகாதனவும் கைகூடுமென்பது கருத்து.