பக்கம் எண் :

நீதி நெறி விளக்கம்199

255.
முயலாது வைத்து முயற்றின்மை யாலே
உயலாகா வூழ்த்திறத்த வென்னார் - மயலாயும்
ஊற்ற மிறுவிளக்க மூழுண்மை காண்டுமென்
றேற்றா ரெறிகான் முகத்து.    
(49)

256.
உலையா முயற்சி களைகணா வூழின்  
வழிசிந்தும் வன்மையு முண்டே - உலகறியப்  
பான்முளை தின்று மறலி யுயிர்குடித்த  
கான்முளையே போலுங் கரி.    
(50)

257.
கால மறிந்தாங் கிடமறிந்து செய்வினையின்
மூல மறிந்து விளைவறிந்து - மேலுந்தாம்
சூழ்வன சூழ்ந்து துணைமை வலிதெரிந்
தாள்வினை யாளப் படும்.        
(51)

    255. முயற்சியின் சிறப்புக் கூறப்படும்.

    முயலாது வைத்து - முயலாமலே யிருந்து; வைத்து: ஒரு சொன்னடை. முயற்று - முயற்சி; “முயற்றின்மை, இன்மை புகுத்தி விடும்” (குறள், 616) ஊழ்த்திறத்த உயலாகா - ஊழின் வழிப்பட்டனவாகிய நன்மைகள் தப்பமாட்டா; ‘ஊழின் வலியால் வரும் நன்மைகள் எப்படியும் கிடைத்துவிடும்; ஆதலின் முயற்சி வேண்டற் பாலதன்று’ என்பாரை மறுத்தபடி. மயலாயும் - மயக்க மடைந்தாலும். ஊற்றம் இறும் விளக்கம் - வன்மை ஒழிந்த விளக்கை. ஊற்றம் - வலி; இங்கே எண்ணெய் திரி முதலியவற்றினால் உண்டாம் வன்மை (பி-ம்.) ‘ஊற்றமிறூ விளக்கம்’. ஊழ் உண்மை காண்டுமென்று - ஊழிருத்தலைச் சோதித்தறிவோமென்று. எறிகால் முகத்து ஏற்றார் - அடிக்கின்ற காற்றுக்கு எதிரே ஏற்றமாட்டார். விளக்கத்தை ஏற்றார்.

    ஊழ் நினையாமலே முயல வேண்டுமென்பது கருத்து. வலியற்ற விளக்கு அவிந்து விடுவதுதானே யென்றெண்ணிக் காற்றடிக்கும் இடத்தில் ஏற்றமாட்டார்கள்; அது சிறிது நேரமாவது எரியெமென்று கருதி அவ்வளவிற் பயன் கொள்ளும்பொருட்டு அதைப் பாதுகாப்பார்கள்; அது போல ஊழின் வலியே கருதி வாளா இராமல் தம்மால் இயன்ற முயற்சி செய்தி அம்மயற்சிக்கேற்ற பயனைப்பெற முயல்வரென்றபடி; “தெய்வத்தானாகாதெனினும் முயற்சிதன், மெய்வருத்தக் கூலி தரும்” (குறள், 619.)

    256. முயற்சியால் ஊழையும் வெல்லலாமென்பது கூறப்படும்.

    உலையா முயற்சி - இடுக்கணிகளுக்கு மனம் அழியாத முயற்சி. களைகணா - பற்றுக்கோடாக. ஊழின் வலி சிந்தும் - ஊழின் வன்மையையும் அழிக்கும். வன்மையும்: உம்மை உயர்வு சிறப்பு. உண்டே: ஏகாரம் தேற்றம். பால் முளை - ஊழின் முளையை. தின்று - அழித்து. மறலி யமனது. உயிர் குடித்த - உயிரைப் போக்கிய. தின்று குடித்த என்றது ஒரு நயம். கான் முளையே - மார்க்கண்டேயரே. போலும்: அசைநிலை. கரி - சான்று.

    257. வினைதொடங்கும் முன் ஆராயவேண்டுவன இவையென்பது இதிற் கூறப்படும்.