முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
9. திருவெங்கைக்கோவை
வெள்ளணியணிந்துவிடுத்துழித் தலைமகன்வாயில்வேண்டல்
மலைமகள் பங்கர் திருவெங்கை வாணர் மணிவரைமேல்
அலைமக ளென்ன வருமட வார்வெள் ளணியணிந்து
கலைமக ளென்ன வடைந்தன ராலினிக் கானவர்தந்
தலைமகண் மெய்ந்நலங் காண்பா னெனையார் தருபவரே.
(390)
தலைவிநெய்யாடியதிகுளைசாற்றல்
மையா டியதடங் கண்ணா ளொருநன் மகவுயிர்த்து
மெய்யா டியதிரு வெண்ணீ றழகர்தம் வெங்கையிலே
செய்யா டியநல் வலம்புரி யீன்ற செழுமணிபோல்
நெய்யா டினணல் வினைப்பயன் மேவு நெடுந்தகையே.
(391)
தலைவன்றன்மனத்துவகைகூர்தல்
பத்திர தன்மக னின்றேத்தும் வெங்கைப் பழமலையார்க்
கத்திர மன்ன விழியுமை யாளயில் வேலவனைப்
புத்திர னென்னும் பொருள்பட வீன்றிலள் பொன்னுரைத்த
சித்திர மன்னவள் புத்திரற் பூத்துச் சிறந்தனளே.
(392)
தலைவிக்கவன்வரல்பாங்கியுணர்த்தல்
ஆடுந் தொழிலர் திருவெங்கை வாண ரணிவரைமேல்
பாடுஞ் சுரும்பு படர்ந்தலர் பூத்த பசுங்கொடியை
நேடும் பணியென நன்மக வீன்ற நினைவிரும்பிக்
கூடும் படிவந் தனர்பிரிந் தேகிய கொற்றவரே.
(393)

390. அலைமகள்-திருமகள். வெள்ளணி-வெள்ளாடை முதலியன. காண்பான்-காண. பான் : வினையெச்ச விகுதி. 391. மெய்யாடிய திருவெண்ணீற்றழகர்-உடல் முழுதும் திருவெண்ணீறு மிகுதியாகப் பூசப்பெற்றுச் செம்மேனியெம்மான் திருமேனி வெண்மேனி யாகிற்றாகையால் திருவெண்ணீற்றழகர் என்றார். மை-அஞ்சனம். நெய்யாடுதல்-நெய் பூசி மூழ்குதல்; இது பிள்ளைப்பேற்றுச் சடங்குகளில் ஒன்ற. 392. பத்திரதன்-தசரதன். அத்திரம்-அம்பு. அயில்-கூர்மை. பொன்னுரைத்தல்-பொன்னுருக்கு நீர்பூசல். 393. ஆடுந்தொழில்-கூத்தாடுந் தொழிலையுடையைவர். தேடும்பணி-தேடுந்தொழில். பணி-தொழில்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்