30

பிள்ளைத் தமிழ்நூல் ஆராய்ச்சி

வா+ரு+கை என அச்சொல் பிரிக்கப்படும்.  ஈண்டு  “ கை “  தொழிற்பெயர் விருதி.

     மயிலின் முதுகின் உதயகுமாரன்

        வருக வருக வருகவே

     மகிமை தழுவு சமரபுரியன்

        வருக வருக வருகவே

                               -திருப்போரூர் முருகப் பிள்ளைத் தமிழ்

    அம்புலிப் பருவம் :    இதுவரை குழந்தையை நோக்கி வேண்டிய பருவங்களைப் பார்த்தோம் இது குழந்தையை நோக்கி வேண்டும் பருவம் அன்று.  இது சந்திரனை வேண்டும் பருவம் ஆகும் அம்புலி என்பதும், சந்திரன்.  இப்பருவத்தைப் பாடுவதில் புலவர்கள் தம்வல்லமையினை மிகுதியும் காட்டுதல் வேண்டும்.  இது குறித்தே ஓளவைப் பிராட்டியார்  “  காசினியில் பிள்ளைக் கவிக்கம் புலிபுலியாம் “  என்று குறிப்பிட்டுள்ளனர்.  இதற்குக் காரணம், சந்திரனைக் குழந்தையுடன் ஆடவா என்று அழைக்கும்போது, சாம, பேத தான, தண்டம் ஆகிய நால்வகை உபாயங்கள் வழி அழைத்தல் வேண்டும்.  இவ்வாறு அழைக்கும்போது, சந்திரனுக்கும் பாட்டுடைத்தலைவனுக்கும் தலைவிக்கும் ஒப்புமை காட்டியும் அழைக்கவேண்டும்.  அதாவது சிலேடை அணி அமையப் பாடுதல் வேண்டும்.  இவ்வாறு அமையப் பாடுதலோடு இன்றிப் பாட்டுடைத்தலைவனும், தலைவியும் பல்லாற்றாலும் சந்திரனைக் காட்டிலும் சிறந்தவர் என்பதையும் கூறிப் பாடி அமைத்தல் வேண்டும்.  இத்துடன்  “ சந்திரா பாட்டுடையாரைச் சாரின் உனக்கு இன்னின்ன நன்மைகள் உண்டாகும் “  என்றும் பாடுதல் வேண்டும்.  இது  பதினெட்டாம் மாத நிகழ்ச்சி.   “ மதி ஈர்ஒன்பதில் மதியை அழைத்தலும் “  என்பது பிங்கலந்தை.

      அலகில்புவ னத்தும்இவள் போலும்ஓர் துணையில்லை

        அம்புலீ ஆடவாவே

     அமரா வதிக்குநிகர் அளகா புரிப்பெணுடன்

        அம்புலீ ஆடவாவே

                           - பெருந்திருப் பிராட்டியார் பிள்ளைத்தமிழ்