அப்படி இறைவனைப் பாடி உருகுகின்ற திருவாசகத்திலும், அருட்பாவிலும் நனைந்த ஈர விழிகள் இந்தப் பட்டினத்தார் பாடல்களிலும் கசிவை ஏற்படுத்துகின்றன. துறவுக்கோலத்தில் வீடு வீடாய்ப் பிச்சையெடுத்து உண்டு திரிவது பட்டினத்தாரின் சகோதரிக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. இப்படிப்பட்ட அவமானத்தைத் தேடித் தரும் தம்பி தனக்கு இருந்தென்ன செத்தென்ன என்ற எண்ணத்துடன் பட்டினத்தாரை விஷம் கலந்த ஆப்பம் கொடுத்துக் கொல்லப் பார்த்தாள். தமக்கையின் கருத்தை அறிந்த பட்டினத்தார், ‘தன்னப்பம் தன்னைச் சுடும்; வீட்டப்பம் ஓட்டைச் சுடும்’ என்று கூறி வீட்டின் கூரை மீது அப்பத்தினை வீச அவ்வீடு தீப்பிடித்து எரிந்தது. இப்படித் துறவியாய்த் திரிந்த காலத்து அன்னை இறந்த துயர் கேட்டு அங்கே சென்று பச்சை வாழை மட்டை மீது அன்னையின் உடலைக் கிடத்தி திருப்பதிகம் பாடித் தீயெழுப்பித் தம் அன்னையாருக்குச் செய்ய வேண்டிய ஈமக்கிரியை செய்து முடித்தார். இவ்வளவு நாட்கள் அவ்வூரில் சுற்றித் திரிந்தது இதற்காகத்தானே. இவர் பாடிய இந்த தகனப்பாடல் புதுச்சேரியிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் இறுதி ஊர்வலப் பாடலாய்த் திருவாசகத்துடன் சேர்த்துப் பாடப்படுகிறது. இது வேறு எந்தச் சித்தர் பாடலுக்கும் இல்லாத சிறப்பாய்க் கருதப்படுகிறது. “ஐயிரண்டு திங்களா யங்கமெலாம் நொந்து பெற்றுப் பையலென்ற போதே பரிந்தெடுத்துச் - செய்யஇரு கைப்புறத்தி லேந்திக் கனகமுலை தந்தாளை எப்பிறப்பிற் காண்பே னினி” |
|