பக்கம் எண் :

சித்தர் பாடல்கள்99


காவிரிப்பூம்பட்டினத்துப்  பெருஞ்செல்வந்தராய்  வாழ்ந்த  சிறப்பு  நோக்கி
இவரை எல்லோரும் பட்டினத்தார் என்றே அழைத்தனர்.

     இவரது  பாடல்களில்  பெரும்பாலும்  திருவாசக  மணமும் நிறைந்து
காணப்படுகிறது. எடுத்துக்காட்டாக,

“புல்லாகிப் பூடாய்ப் புலந்தநாள் போதாதோ?
கல்லாய் மரமாய்க் கழிந்தநாள் போதாதோ?
கீரியாய்க் கீடமாய்க் கெட்டநாள் போதாதோ?
நீரியாய் ஊர்வனவாய் நின்றநாள் போதாதோ?            (21-22)

என்ற வரிகள் மாணிக்கவாசகரின்,

“புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்ல ஆ நின்றஇத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
மெய்யே உன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்”

என்ற சிவபுராண வரிகளை நினைவூட்டுகின்றன.

     இன்னும்  சில  பாடல்கள்  இராமலிங்க  அடிகளாரின்  பாடல்களை
மனத்தினில் நிழலாட வைக்கின்றன.

“தன்னை அறிந்தேன்டி ! தனிக்குமரி ஆனேன்டி
தன்னம் தனியே தனி இருக்கும் பக்குவமோ?

என்ற  வரிகள்  இராமலிங்கரின்  ‘தனித்திருக்க மாட்டேனடி’ என்ற பாடலை
நினைவுறுத்துகின்றன.

     மொத்தத்தில்  இறைவனை  உருக  வைப்பதில்  மாணிக்க  வாசகரும்,
இராமலிங்க அடிகளாரும் கலந்த கலவை இந்தப் பட்டினத்தார் எனலாம்.