“நாடுநகர் வீடுமாடு நற்பொருளெல்லாம் நடுவன் வரும்பொழுது நாடிவருமோ கூடுபோனபின் பவற்றாற் கொள்பயனென்னோ கூத்தன் பதங்குறித்துநின் றாடாய்பாம்பே” ராணிக்கு ஒரே அதிர்ச்சி. தன் மனதில் எழுந்த சந்தேகத்திற்குப் பதிலளிப்பது போல் இப்படிப் பாடுகின்றாரே, மா, பலா, வாழை, பெண்கள் என்று கனிரசமும் காமரசமும் பருகி வாழ்ந்தவர் இன்று கூத்தன் பதத்தை அல்லவா பாடுகின்றார் என்று வியப்படைந்தாள். அவர் வியப்பை அதிகமாக்குவதைப் போல் மேலும் சில பாடல்களைப் பாடினார். “மாடகூட மாளிகைகள் வண்ண மண்டபம் மதில்சூழ்ந்த வரண்மனை மற்றும் முள்ளவை கூடவாரா வென்றந்தக் கொள்கை யறிந்தோர் குலவாமல் வெறுப்பாரென் றாடாய் பாம்பே” “மலைபோன்ற செம்பொற்குவை வைத்திருப்பவர் மறலி வருகையில் வாரிச்செல்வரோ அலை யாமலகத்தினை யத்தன் பால்வைத்தோர் அழியாரென்றே நீ துணிந்தாடாய் பாம்பே” “பஞ்சணையும் பூவணையும் பாயலும் வெறும் பாழ்சுடு காடதிலே பயன் பெறுமோ மஞ்சள் மணம்போய் சுடு நாறு மணங்கள் வருமென்று தெளிந்து நின்றாடாய் பாம்பே” “முக்கனியுஞ் சக்கரையு மோதகங்களும் முதிர்சுவைப் பண்டங்களு முந்தியுண்டவாய் மிக்கவுயிர் போனபின்பு மண்ணை விழுங்க மெய்யாகக் கண்டோமென் றாடாய் பாம்பே” ஆகா எத்தனை தத்துவார்த்தமான பாடல்கள். பெண்ணாசை விலக்கலைப் பற்றியும் பாடத் தொடங்குகின்றார். |