“வெயில்கண்டமஞ்சள் போன்ற மாதரழகை விரும்பியே மேல்விழுந்து மேவுமாந்தர் ஒயில்கண்டே யிலவுகாத் தோடுங்கிளிபோல் உடல் போனாலோடு வாரென்றாடாய் பாம்பே” போதும் என்று அவரை கையெடுத்துக் கும்பிட்ட ராணி, ஐயா, தாங்கள் யார்? எங்கள் அரசரா? அல்லது யாராவது மகானின் ஆத்மா இந்த உடலில் புகுந்துள்ளீரா? என்று கேட்டாள். சித்தரும் அவளுக்கு நடந்த உண்மைகளைக் கூறினார். சில காலம் இவ்வுடலில் வசிக்க வேண்டிய கட்டாயத்தையும் கூறி அவளுடன் இல்வாழ்க்கையைத் தாமரை இலைத் தண்ணீர் போலத் தொடர்ந்தார். இவர் சித்தராய்த் திரிந்த காலத்து இவருடைய சீடர்களாய் இருந்தவர்கள் தம் குருநாதர் நீண்ட நாட்களாய் வராமை கண்டு பின்னர்த் தம் குருவருளால் அவரிருக்குமிடமறிந்து, அவர் தம் பழைய உடலுக்குத் திரும்பும்வண்ணம் பொருளமைந்த சில பாடல்களைப் பாடினார்கள். பின்னர் அன்றிரவு வெட்டியான் வேடம் பூண்டு நான்கு சாமத்துக்கும் பின்வரும் நான்கு வெண்பாக்களைப் பாடிப் பறையடித்துக் குருவை மீட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது. “ஆலஞ்சரீரம் அநித்தியம் என்று எண்ணாக் காலன் தினம் வருவான் காணுங்கள் - காலன் கலங்காத கண்டன்நற் கண்மணியைப் போற்றி உறங்கி யுறங்காது இரு” “வானமணித் தேவர் வனத்திலுள வைவேடர் ஞானமணி யைத்திருட நன்னினார் - ஞானம் நிறுங்காலம் தானறிந்து நல்லுணர்வை நாடி உறங்கி உறங்காது இரு” |