அருளான மூலகுரு வையர் செயலால் ஆனந்தங் கொண்டோமென் றாடாய் பாம்பே. | 93 |
| |
ஏட்டுச்சுரைக் காய்கறிக்கிங் கெய்தி டாதுபோல் எண்டிசைதி ரிந்துங்கதி யெய்த லிலையே நாட்டுக்கொரு கோயிற்கட்டி நாளும் பூசித்தே நாதன்பாதங் காணார்களென் றாடாய் பாம்பே. | 94 |
| |
தன்னையறிந் தொழுகுவார் தன்னை மறைப்பார் தன்னையறி யாதவரே தன்னைக் காட்டுவார் பின்னையொரு கடவுளைப் பேண நினையார் பேரொளியைப் பேணுவாரென் றாடாய் பாம்பே. | 95 |
| |
பாலிற்சுவை போலுமெங்கும் பாய்ந்த வொளியைப் பற்றுப்பொன் பற்றவைத்த பான்மை போலே காலிற்சுழு முனைநின்று கண்டு கொண்டு களித்துக் களித்துநின் றாடாய் பாம்பே. | 96 |
| |
தேக்கெடுத்தே ஓடும்வானத் தேனை உண்டபின் தேகபந்தம் கொண்டனமித் தேச வாழ்வினை ஓக்காளமென் றெண்ணிமிகு மோகை யுடனீ உள்ளந் தெளிந்துநின் றாடாய் பாம்பே. | 97 |
| |
சதுர்வேதம் ஆறுவகை சாஸ்தி ரம்பல தந்திரம் புராணங்கலை சாற்று மாகமம் விதம்வித மானவான வேறு நூல்களும் வீணான நூல்களேயென் றாடாய் பாம்பே. | 98 |
| |
சமயபேதம் பலவான சாதி பேதங்கள் சகத்தோர்க்கே யல்லாதுசற் சாதுக் களுக்கோ சிமயத்தி லேறினபேர் சித்த மாறுமோ சித்தர்சித் தாந்தந்தேர்ந் தாடாய் பாம்பே. | 99 |
| |
பூசைசெய்த தாலேசுத்த போதம் வருமோ பூமிவலஞ் செய்ததனாற் புண்ணிய முண்டோ ஆசையற்ற காலத்திலே ஆதி வஸ்துவை அடையலா மென்றுதுணிந் தாடாய் பாம்பே. | 100 |