வரப்போகும் பஞ்சத்துக்குத் தம்மைத் தயார்படுத்திக் கொண்டார். வற்கடம் வந்தது. பஞ்சத்தால் உணவும் நீருமின்றி உயிர்கள் மாண்டன. நாடே ஜன சந்தடியில்லாமல் வெறிச்சோடிக் காட்சியளித்தது. ஆனால், இடைக்காடர் மட்டும் என்றும் போல் தம் ஆடுகளுடன் வாழ்ந்திருந்தார். நாட்டில் பஞ்சத்தால் உயிர்களெல்லாம் அழிந்து போக இடைக்காடரும் அவரது ஆடுகளும் மட்டும் பிழைத்திருப்பதைக் கண்ட நவக்கிரகங்கள் ஆச்சரியமுடன் அந்த இரகசியத்தை அறிந்துகொள்ள இவரிடம் வந்தன. இடைக்காடருக்கோ ஆனந்தம். நவநாயகர்களும் என்குடிசையை நாடி வந்துள்ளீர்களே! உங்களை உபசரிக்க எம்மிடம் ஒன்றுமில்லை. ஆயினும் இந்த ஏழையின் குடிசையில் கிடைக்கும் வரகு ரொட்டியையும், ஆட்டுப் பாலையும் சாப்பிட்டுச் சிரம பரிகாரம் செய்து கொள்ளுங்கள் என்று உபசரித்தார். பஞ்ச காலத்திலும் பசிக்கு உணவு தரும் இடைக்காடரைக் கண்டு மகிழ்ந்த நவ கோள்களும் அந்த விருந்தினைப் புசித்தனர். எருக்கிலைச் சத்து ஆட்டுப்பால் அவர்களுக்கு மயக்கத்தை வரவழைக்கவே அவர்கள் மயக்கத்தால் உறங்கி விட்டனர். இந்த சமயத்தில் நவகோள்கள் ஒன்றுடன் ஒன்று மாறுபட்டு உலகத்தைப் பஞ்சத்தால் வருத்தும் கிரகங்களை இடைக்காடர் அவைகள் எந்த அமைப்பில் இருந்தால் மழை பொழியுமோ அதற்குத் தக்கவாறு மாற்றிப் படுக்க வைத்து விட்டார். |