பக்கம் எண் :

சித்தர் பாடல்கள்209


     வானம்  இருண்டது,  மேகம்  திரண்டது,  மழை பொழிந்தது. வறட்சி
நீங்கியது.  கண்  விழித்துப் பார்த்த நவகோள்களும் திடுக்கிட்டனர். நொடிப்
பொழுதில்  இடைக்காடர்  செய்த  அற்புதம் அவர்களுக்கு விளங்கிவிட்டது.
நாட்டின்  பஞ்சத்தை  நீக்கிய  சித்தரின்  அறிவுத்திறனை மெச்சி அவருக்கு
வேண்டிய வரங்களைக் கொடுத்து விடைபெற்றனர்.

    இந்த இடைக்காடரின் புகழ் பூவுலகம் மட்டுமன்றி வானுலகமும் எட்டியது.
ஒரு சமயம்  விஷ்ணுவை வழிபடுகிறவர்களுக்கு  ஒரு சந்தேகம் தோன்றியது.
விஷ்ணுவின்  தசாவதாரங்களில்  மிகவும்  வணங்கத்தக்கவை  எவை  என்று
எழவே சித்தரிடம் கேட்டனர்.

     இடைக்காடரோ  ‘ஏழை இடையன் இளிச்சவாயன்’  என்று கூறிவிட்டுச்
சென்று  விட்டார்.  தங்களுக்குப்  பதில்  சொல்லச் சங்கடப்பட்டு தன்னைத்
தாழ்த்திக்  கொண்டு  சென்றுவிட்டாரோ   என்று  அவரது  தன்னடகத்தை
எண்ணிய  அவர்கள்  பின்னர் அவர் கூறியதை மறுபடியும் எண்ணிய போது
அவர்கள் கேட்ட கேள்விக்கான விடையும் புலப்பட்டது.

     ஏழை - சக்கரவர்த்தித்  திருமகனாகப் பிறந்தும் ஏழையாகவே வாழ்ந்த
இராமன் அவதாரம்.

     இடையன் - கிருஷ்ணாவதாரம்
     இளிச்சவாயன் - நரசிம்மர்

     தேவர்கள்  இடைக்காடரின்   தன்னடக்கத்தையும்   நுண்ணறிவையும்
புகழ்ந்தவாறு தம்முலகு சென்றனர்.