எல்லாம் இருந்தாலும் ஈசர் அருள் இல்லையேல் எதுவுமே இல்லாத் தன்மை யாகும் என்பதில் இறைவனின் எங்கும் நிறைந்த தன்மையும் உணர்த்துகின்றார். நெஞ்சோடு கிளத்தலில் மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசைகளை நீக்கும்படி அறிவுறுத்துகின்றார். பூமியெல்லாம் ஒரு குடைக்கீழ்ப் பொருந்த அரசாளு தற்கு காமியம் வைத்தால் உனக்கதி யுள்ளதோ கல்மனமே பெண்ணாசை யைக் கொண்டு பேணித் திரிந்தக்கால் விண்ணாசை வைக்க விதியில்லையே கல்மனமே பொன்னிச்சைக் கொண்டு பூமிமுற்றும் திரிந்தால் மண்ணிச்சை நோக்கம் வாய்க்குமோ கல்மனமே என்று மூவாசைகளையும் துறக்கச் சொல்கின்றார். அறிவோடு கிளத்தலில் கட்புலனுக்கு எவ்வளவும் காணாது இருந்தெங்கும் உட்புலனாய் நின்ற ஒன்றை உய்த்தறி வாய் நீ புல்லறியே என்று உண்மை இறையை உணர்ந்து கொள்ளச் சொல்கின்றார். சித்தத்தோடு கிளத்தலில் மாணிக்கவாசகரைப் போலவே தும்புவை விளித்துப் பாடுகின்றார். மூவாசை விட்டோம் என்றே தும்பீபற அஞ்ஞானம் போயிற்று என்று தும்பீபற எப்பொருளும் கனவென்றே தும்பீபற |