பக்கம் எண் :

242சித்தர் பாடல்கள்

பாசம் போனாலும்                           அகப்பேய்
     பசுக்களும் போகாவே.
36
  
நாண மேதுக்கடி                             அகப்பேய்
     நல்வினை தீர்ந்தக்கால்
காண வேணுமென்றால்                        அகப்பேய்
     காணக் கிடையாதே.
37
  
சும்மா இருந்துவிடாய்                        அகப்பேய்
     சூத்திரஞ் சொன்னேனே
சும்மா இருந்தவிடம்                          அகப்பேய்
     சுட்டது கண்டாயே.
38
  
உன்றனைக் காணாதே                         அகப்பேய்
     ஊனுள் நுழைந்தாயே
என்றனைக் காணாதே                         அகப்பேய்
     இடத்தில் வந்தாயே.
39
  
வான மோடிவரில்                            அகப்பேய்
     வந்தும் பிறப்பாயே
தேனை யுண்ணாமல்                          அகப்பேய்
     தெருவோ டலைந்தாயே.
40
  
சைவ மானதடி                              அகப்பேய்
     தானாய் நின்றதடி
சைவ மில்லையாகில்                         அகப்பேய்
     சலம்வருங் கண்டாயே.
41
  
ஆசை யற்றவிடம்                           அகப்பேய்
     அசாரங் கண்டாயே
ஈசன் பாசமடி                               அகப்பேய்
     எங்ஙனஞ் சென்றாலும்.
42
  
ஆணவ மூலமடி                             அகப்பேய்
     அகாரமாய் வந்ததடி
கோணு முகாரமடி                            அகப்பேய்
     கூடப் பிறந்ததுவே.
43