வாழவைக்கும் காயகற்ப முறைகளை நாடி வீண் பொழுது கழிக்க மாட்டார்கள் என்று கூறுகின்றார். யோக சக்தி படைத்தவர்கள் காலனை வென்றவர்களாவார்கள். அவர்களைக் காலன் நெருங்க மாட்டான். நீண்ட நாள் உயிர் வாழும் தன்மையை அவர்கள் இயல்பாகவே பெற்றிருப்பதால் மரணம் என்பது அவர்களாகவே நிர்ணயித்துக் கொள்வது. இந்த நிலையில் அட்டாங்க யோகத்தில் ஒன்றான வேண்டிய வடிவமெடுக்கும் ஈசத்துவம் தேவையில்லை என்பது குதம்பைச் சித்தரின் கருத்து. இதனை, “காலனை வென்ற கருத்தறி வாளர்க்குக் கோலங்கள் ஏதுக்கடி” என்கிறார். காயகற்ப சாதனைகளைச் செய்யாத சித்தர்களே இல்லை என்று கூறுமளவு பெரும்பாலும் எல்லாச் சித்தர்களும் காயகற்பப் பயிற்சியை மேற்கொண்ட நிலையில் உண்மை ஞானிகள் காயகற்பந் தேட மாட்டார்கள் என்று வித்தியாசமாகத் தெரிவிக்கின்றார். “மெய்ப்பொருள் கண்டு விளங்கும் மெய்ஞானிக்குக் கற்பங்கள் ஏதுக்கடி - குதம்பாய்” கடவுளின் உண்மை உணர்ந்த ஞானிகளுக்கு உடலை வளர்க்கும் காயகற்பங்கள் தேவையில்லை என்பது குதம்பையாரின் தனிக் கருத்தாகும். நோயற்ற வாழ்வு வாழும் அவர்களுக்கு யோக சித்திகள் மூலம் உடலை வலுப்படுத்தும் காயகற்பம் தேவையா என்ற வினாவை எழுப்பிய அவர் வாசியோகமான பிரணாயமத்தை பின்பற்றும் ஒருவருக்கு யோகம்கூடத் தேவையில்லை என்ற முடிவுக்கு வருகின்றார். |