பக்கம் எண் :

சித்தர் பாடல்கள்253


“வேகமடக்கி விளங்கு மெய்ஞ்ஞானிக்கு
 யோகந் தானேதுக் கடி”

என்று அவர் கேட்பது நியாயமாகத்தானே படுகிறது.

உலகில் அஞ் ஞானம் ஒழிந்திட யார்க்கும்
இலகும் கடவுளை ஏத்தி - நலமார்
குதம்பாய் மெய்ஞ்ஞானம் கூறவே நன்கு
நிதம்பார்த்து நெஞ்சில் நினை.

பூரணங் கண்டோர்இப் பூமியிலேவரக்
     காரணம் இல்லையடி குதம்பாய்
     காரணம் இல்லையடி.
1
  
போங்காலம் நீங்கநற் பூரணம் கண்டோர்க்குச்
     சாங்காலம் இல்லையடி குதம்பாய்
     சாங்காலம் இல்லையடி.
2
  
செத்துப் பிறக்கின்ற தேவைத் துதிப்போர்க்கு
     முத்திதான் இல்லையடி குதம்பாய்
     முத்திதான் இல்லையடி.
3
  
வஸ்து தரிசன மாட்சியாய்க் கண்டோர்க்குக்
     கஸ்திசற்று இல்லையடி குதம்பாய்
     கஸ்திசற்று இல்லையடி.
4
  
பற்றற்ற வத்துவைப் பற்றறக் கண்டோர்க்குக்
     குற்றங்கள் இல்லையடி குதம்பாய்
     குற்றங்கள் இல்லையடி.
5
  
காட்சியாம் காட்சி கடந்த பிரமத்தைச்
     சூட்சியாய்ப் பார்ப்பாயடி குதம்பாய்
     சூட்சியாய்ப் பார்ப்பாயடி.
6
  
வெட்டவெளிக்குள் வெறும்பாழாய் நின்றதை
     இட்டமாய்ப் பார்ப்பாயடி குதம்பாய்
     இட்டமாய்ப் பார்ப்பாயடி.
7