பக்கம் எண் :

258சித்தர் பாடல்கள்

எந்த உயிர் கட்கும் எந்த உலகிற்கும்
     அந்தமாய் நின்றானடி குதம்பாய்
     அந்தமாய் நின்றாடின.
47
  
தணிவான புத்தியால் தாணு அறியாதோர்
     அணுவேனும் இல்லையடி குதம்பாய்
     அணுவேனும் இல்லையடி.
48
  
மூன்று தொழிலினை மூர்த்திசெய் யாவிடில்
     தோன்றாது உலகமடி குதம்பாய்
     தோன்றாது உலகமடி.
49
  
சீரான தேவன் சிறப்பினைச் சொல்லவே
     யாரலே யாகுமடி? குதம்பாய்
     யாரலே யாகுமடி?
50
  
             முத்திநிலை பெறும் வழி

எல்லார்க்கும் மேலான ஏகனைப் பற்றிய
     வல்லார்க்கு முத்தியடி குதம்பாய்
     வல்லார்க்கு முத்தியடி.
51
  
பற்றற நின்றானைப் பற்றறப் பற்றிடக்
     கற்றார்க்கு முத்தியடி குதம்பாய்
     கற்றார்க்கு முத்தியடி.
52
  
பந்தத்தை விட்டொளிர் பந்தத்தைப் பற்றினால்
     சந்தத முத்தியடி குதம்பாய்
     சந்தத முத்தியடி.
53
  
ஆமைபோல் ஐந்தும் அடக்கித் திரிகின்ற
     ஊமைக்கு முத்தியடி குதம்பாய்
     ஊமைக்கு முத்தியடி.
54
  
மந்தி மனத்தை வயப்படுத் திட்டார்க்கு
     வந்தெய்தும் முத்தியடி குதம்பாய்
     வந்தெய்தும் முத்தியடி.
55