பக்கம் எண் :

சித்தர் பாடல்கள்259


அந்தக் கரணம் அடங்க அடக்கினால்
     சொந்தம் பிரமமடி குதம்பாய்
     சொந்தம் பிரமமடி.
56
  
தாய்குச் சரியான தற்பரம் சார்ந்திடில்
     வாய்க்கும் பதவியடி குதம்பாய்
     வாய்க்கும் பதவியடி.
57
  
சுத்த பிரமத்தைத் தொந்தமென்று ஓட்டினால்
     சித்திக்கும் முத்தியடி குதம்பாய்
     சித்திக்கும் முத்தியடி.
58
  
கன்றை விடாதுசெல் கற்றாவைப்போல் வத்தை
     ஒன்றினால் முத்தியடி குதம்பாய்
     ஒன்றினால் முத்தியடி.
59
  
கைக்கனி போலவே காசறு பிரமத்தில்
     சொக்கினால் முத்தியடி குதம்பாய்
     சொக்கினால் முத்தியடி.
60
  
நித்திய வத்துவை நீங்காது நாடினால்
     முத்திதான் சித்திக்குமே குதம்பாய்
     முத்திதான் சித்திகுமே.
61
  
             தேகத்தைப் பழித்தல்

பேசரு நாற்றம் பெருகும் உடலுக்கு
     வாசனை ஏதுக்கடி குதம்பாய்
     வாசனை ஏதுக்கடி.
62
  
துற்கந்த மாய்மலம் சோரும் உடலுக்கு
     நற்கந்த மேதுக்கடி குதம்பாய்
     நற்கந்த மேதுக்கடி.
63
  
நீச்சுக் கவுச்சது நீங்கா மெய்க்கு மஞ்சள்
     பூச்சுத்தான் ஏதுக்கடி குதம்பாய்
     பூச்சுத்தான் ஏதுக்கடி.
64