பக்கம் எண் :

சித்தர் பாடல்கள்269


               சமயநிலை கூறல்

தன்புத்தி தெய்வமாய்ச் சாற்றிய சார்வாகம்
     புன்புத்தி ஆகுமடி குதம்பாய்
     புன்புத்தி ஆகுமடி.
146
  
கல்லினைச் செம்பினைக் கட்டையைக் கும்பிடல்
     புல்லறி வாகுமடி குதம்பாய்
     புல்லறி வாகுமடி.
147
  
அண்டத்தைக் கண்டு அநாதியில் என்பவர்
     கொண்ட கருத்தவமே குதம்பாய்
     கொண்ட கருத்தவமே.
148
  
பெண்ணின்ப முத்தியாய்ப் பேசும்பா டாண்மதம்
     கண்ணின்மை ஆகுமடி குதம்பாய்
     கண்ணின்மை ஆகுமடி.
149
  
சூரியன் தெய்மாய்ச் சுட்டுஞ் சமயந்தான்
     காரியம் அல்லவடி குதம்பாய்
     காரியம் அல்லவடி.
150
  
மனம்தெய்வம் என்று மகிழ்ந்து கொண்டாடிய
     இனமதி ஈனமடி குதம்பாய்
     இனமதி ஈனமடி.
151
  
பற்பல மார்க்கம் பகர்ந்திடும் வேதங்கள்
     கற்பனை ஆகுமடி குதம்பாய்
     கற்பனை ஆகுமடி.
152
  
நீண்ட குரங்கை நெடிய பருந்தினை
     வேண்டப் பயன்வருமோ? குதம்பாய்
     வேண்டப் பயன்வருமோ?
153
  
மெய்த்தேவன் ஒன்றென்று வேண்டாத பன்மதம்
     பொய்த்தேவைப் போற்றுமடி குதம்பாய்
     பொய்த்தேவைப் போற்றுமடி.
154