பக்கம் எண் :

270சித்தர் பாடல்கள்

              மந்திரநிலை கூறல்

நாற்பத்து முக்கோணம் நாடும் எழுத்தெலாம்
     மேற்பற்றிக் கண்டறி நீ குதம்பாய்
     மேற்பற்றிக் கண்டறி நீ.
155
  
சட்கோணத்து உள்ளந்தச் சண்முக அக்கரம்
     உட்கோணத்து உள்ளறி நீ குதம்பாய்
     உட்கோணத்து உள்ளறி நீ.
156
  
ஐந்தெழுத்து ஐந்தறைக் கார்ந்திடும் அவ்வாறே
     சிந்தையுள் கண்டறி நீ குதம்பாய்
     சிந்தையுள் கண்டறி நீ.
157
  
            வாதநிலை கூறல்

ஆறாறு காரமும் நூறுமே சேர்ந்திடில்
     வீறான முப்பாமடி குதம்பாய்
     வீறான முப்பாமடி.
158
  
விந்தொடு நாதம் விளங்கத் துலங்கினால்
     வந்தது வாதமடி குதம்பாய்
     வந்தது வாதமடி.
159
  
அப்பினைக் கொண்டந்த உப்பினைக் கட்டினால்
     முப்பூ ஆகுமடி குதம்பாய்
     முப்பூ ஆகுமடி.
160
  
உள்ளக் கருவியே உண்மை வாதம் அன்றிக்
     கொள்ளக் கிடையாதடி குதம்பாய்
     கொள்ளக் கிடையாதடி.
161
  
பெண்ணாலே வாதம் பிறப்பதே அல்லாமல்
     மண்ணாலே இல்லையடி குதம்பாய்
     மண்ணாலே இல்லையடி.
162
  
ஐந்து சரக்கொடு விந்துநா தம் சேரில்
     வெந்திடும் லோகமடி குதம்பாய்
     வெந்திடும் லோகமடி.
163