பக்கம் எண் :

சித்தர் பாடல்கள்271


               வயித்தியங் கூறல்

முப்பிணி தன்னை அறியாத மூடர்கள்
     எப்பிணி தீர்ப்பாரடி குதம்பாய்
     எப்பிணி தீர்ப்பாரடி.
164
  
எட்டெட்டும் கட்டி இருக்குமேற் தீயினிற்
     விட்டோடும் நோய்கள் எல்லாம் குதம்பாய்
     விட்டோடும் நோய்கள் எல்லாம்.
165
  
நாடி ஒருபது நன்காய் அறிந்திடில்
     ஓடிவிடும் பிணியே குதம்பாய்
     ஓடுவிடும் பிணியே.
166
  
சத்தவகை தாது தன்னை அறிந்தவன்
     சுத்த வயித்தியனே குதம்பாய்
     சுத்த வயித்தியனே.
167
  
வாயு ஒருபத்தும் வாய்த்த நிலைகண்டோன்
     ஆயுள் அறிவானடி குதம்பாய்
     ஆயுள் அறிவானடி.
168
  
ஆயுள் வேதப்படி அவிழ்த முடித்திடில்
     மாயும் வியாதியடி குதம்பாய்
     மாயும் வியாதிபடி.
169
  
              கற்பநிலை கூறல்

பொற்பாந்த முப்பூவைப் போதம் பொசித்தவர்
     கற்பாந்தம் வாழ்வாரடி குதம்பாய்
     கற்பாந்தம் வாழ்வாரடி.
170
  
வேவாத முப்பூவை வேண்டி உண் டார்பாரில்
     சாவாமல் வாழ்வாரடி குதம்பாய்
     சாவாமல் வாழ்வாரடி.
171
  
விந்து விடார்களே வெடிய சுடலையில்
     வெந்து விடார்களடி குதம்பாய்
     வெந்து விடார்களடி.
172