பக்கம் எண் :

272சித்தர் பாடல்கள்

தொல்லைச் சடம்விட்டுச் சுட்ட சடம்கொண்டோர்
     எல்லையில் வாழ்வாரடி குதம்பாய்
     எல்லையில் வாழ்வாரடி.
173
  
தோற்பையை நீக்கிநற் சோதிப்பை கொண்டவர்
     மேற்பைநஞ் சுண்பாரடி குதம்பாய்
     மேற்பைநஞ் சுண்பாரடி.
174
  
மாற்றினை ஏற்ற வயங்கும்நெடி யோர்களே
     கூற்றினை வெல்வாரடி குதம்பாய்
     கூற்றினை வெல்வாரடி.
175
  
            தலங்களிவை எனல்

கோயில் பலதேடிக் கும்பிட்ட தால்உனக்கு
     ஏயும் பலன் வருமோ? குதம்பாய்
     ஏயும் பலன் வருமோ?
176
  
சித்தத் தலம்போலத் தெய்வம் இருக்கின்ற
     சுத்தத் தலங்களுண்டோ? குதம்பாய்
     சுத்தத் தலங்களுண்டோ?
177
  
மெய்த்தலத்து இல்லாத மெய்ப்பொருள் ஆனவர்
     பொய்த்தலத் தெய்வத்துண்டோ? குதம்பாய்
     பொய்த்தலத் தெய்வத்துண்டோ?
178
  
சிற்பர்கள் கட்டுந் திருக்கோயில் உள்ளாகத்
     தற்பரம் வாழ்வதுண்டோ? குதம்பாய்
     தற்பரம் வாழ்வதுண்டோ?
179
  
தன்னால் உண்டாம்சிட்டி தன்னாலே சிட்டித்த
     புன்கோயில் உள்ளவன்யார்? குதம்பாய்
     புன்கோயில் உள்ளவன்யார்?
180
  
அன்பான பத்தர் அகக்கோயில் கர்த்தற்கே
     இன்பான கோயிலடி குதம்பாய்
     இன்பான கோயிலடி.
181