பக்கம் எண் :

274சித்தர் பாடல்கள்

            அஞ்ஞானங் கடிதல்

மீளா வியாதியில் மேன்மேலும் நொந்தார்க்கு
     நாளேது கோளேதடி குதம்பாய்
     நாளேது கோளேதடி.
191
  
தீட்டால் உடம்பு திறங்கொண்டிருக்கையில்
     தீட்டென்று சொல்வதென்னை? குதம்பாய்
     தீட்டென்று சொல்வதென்னை?
192
  
செத்தபின் சாப்பறை செத்தார்க்குச் சேவித்தால்
     சத்தம் அறிவாரடி குதம்பாய்
     சத்தம் அறிவாரடி.
193
  
தந்தைதாய் செய்வினை சந்ததிக்கு ஆமென்பார்
     சிந்தை தெளிந்திலரே குதம்பாய்
     சிந்தை தெளிந்திலரே.
194
  
பிள்ளைகள் செய்தன்மம் பெற்றோர்க்கு உறுமென்றால்
     வெள்ளறி வாகுமடி குதம்பாய்
     வெள்ளறி வாகுமடி.
195
  
பந்தவினைக்கு ஈடாடிப் பாரிற் பிறந்தோர்க்குச்
     சொந்தமது இல்லையடி குதம்பாய்
     சொந்தமது இல்லையடி.
196
  
பார்ப்பார் சடங்கு பலனின்று பாரிலே
     தீர்ப்பாக எண்ணிடுவாய் குதம்பாய்
     தீர்ப்பாக எண்ணிடுவாய்.
197
  
அந்தணர்க்கு ஆவை அளித்தோர்கள் ஆவிக்குச்
     சொந்தமோ முத்தியடி குதம்பாய்
     சொந்தமோ முத்தியடி.
198
  
வேதியர் கட்டிய வீணான வேதத்தைச்
     சோதித்துத் தள்ளடியோ குதம்பாய்
     சோதித்துத் தள்ளடியோ.
199