பக்கம் எண் :

சித்தர் பாடல்கள்283


பாய்ச்சுவேன். செடிகளெல்லாம் நிறைய பூக்களைப் பூக்கும். பூக்களையெல்லாம்
பறித்துக்கொண்டு  போய்  நல்ல  விலைக்கு  விற்பேன்.  எனக்குப்  பெரும்
பொருள்  சேரும்.  அந்தப்  பொருளைக்  கொண்டு பெரிய மடம் ஒன்றைக்
கட்டுவேன். அந்த மடத்தில் நிறைய ஆண்டிகள் தங்குவார்கள்.

     ஆண்டி மடம் கட்டினான்  கற்பனையில். சரி, கற்பனைக்கு யார் தடை
விதிக்கப்   போகிறார்கள்?  அரும்பாடுபட்டு  வாங்கி  வந்த  தோண்டியை
அருமையாகப்   பாதுகாக்க   வேண்டு   மல்லவா?   தனக்குத்   தோண்டி
கிடைத்துவிட்ட   சந்தோஷத்தில்  தலையில்  வைத்துக்  கொண்டு  ஆடாத
ஆட்டமெல்லாம்  ஆடிப்  பார்த்தான்.  சந்தோஷத்தில் என்ன செய்கிறோம்
என்று  தெரியாமல்  அந்தத்  தோண்டியைப்  பொத்தென்று  கீழே போட்டு
உடைத்து விட்டான்.

     பத்து  மாதங்கள்  குயவனிடம்  கெஞ்சி  வாங்கி  வந்த குடம் பத்தே
விநாடிகளில்  ‘படார்’.  இனியென்ன  செய்வது?  குயவன்  மறுபடியும்  ஒரு
தோண்டி   தருவானா?   கேள்விக்குறியுடன்   பரிதாபமாகக்   குயவனைப்
பார்க்கிறான் ஆண்டி.

     இது  சாதாரண  ஆண்டி,  குயவன்,  தோண்டி கதையல்ல. மனிதனின்
ஜீவரகசியம்.  பத்து  மாதம்  தவமிருந்து  கிடைக்கப்பெற்ற  உடலை அவன்
போற்றி  பாதுகாக்காது  அற்ப  சுகங்களுக்கு ஆசைப்பட்டு வீணே அழித்து
வருகிறானே என்ற அனுதாபத்தில் பாடப்பட்டது.

     பத்து  மாதங்களாகத்  தவம்  செய்து  பெற்றது  மனிதா நீ கூத்தாடிக்
கூத்தாடிப் போட்டு உடைப்பதற்குத்தானோ?