அழகான வர்ணஜாலங்களுடன் மிதந்து வரும் நீர்க்குமிழியானது காற்று வேகமாக அடித்தாலோ அல்லது எதன் மீதாவது மோதினாலோ பட்டென்று உடைந்து தெரிந்து விடும். மனித வாழ்வும் இப்படித்தான் மாட மாளிகை, ஆள், அம்பு சேனைகளுடன் பெரும் சிறப்புடன் வாழ்ந்தாலும் திடீரென்று அழிவுற்றுக் காணாமல் போய்விடும். இந்த மாய வித்தையின் இரகசியத்தை மனிதா நீ அறிந்து அழியும் உலகப் பொருள்களின் மேல் பற்று வைக்காமல் இருப்பாயாக என்கிறார். மேலும் இந்த உலக வாழ்க்கை மட்டுமல்ல, நீகூட நிலையில்லாத ஒரு பொருள்தான். இந்த உலகம் உனக்குத்தான் சொந்தம் என்று உலகிலுள்ள பொருட்களைச் சொந்தம் கொண்டாடி சேர்த்து வைக்காதே. இன்று உனக்குச் சொந்தமான அந்தப் பொருட்களெல்லாம் நாளை வேறொருவருக்குச் சொந்தமாகும். நீ நிரந்தரமானவன் இல்லை. உன்னை உன் உயிரை என்றைக்காயினும் எமன் கொண்டோடிப் போவான். ஆகையால் பாபஞ் செய்யாதிருப்பாயாக என்று உபதேசமும் செய்கிறார். பாபஞ் செய்யாதிரு மனமே - நாளைக் கோபஞ் செய்தே யமன் கொண்டோடிப் போவான் பாபஞ் செய்யாதிரு மனமே முடிந்த வரை உன் வாழ்க்கையில் யாருக்கும் வயிறெரிந்து சாபமிடாதே. ஒவ்வொன்றும் விதிப்படிதான் நடக்கும். ஆகையால் உன் வயிற்றெரிச்சல் அந்த மனிதனைத் துன்பத்திற்காட்படுத்தும் என்பதையும் அறிந்து கோபத்தைக் கட்டுப்படுத்து என்றும் அறிவுரை கூறுகின்றார். |