பக்கம் எண் :

சித்தர் பாடல்கள்423


இருக்கையிலே செயநீர்செந் தூரஞ் சுன்னம்
     எடுத்தெடுத்தே யடுக்கிவைப்பார் அநேகங் கோடி;
இருக்கையிலே தொழிலெடுப்பா ரார்க்குக் காட்டார்;
     இல்லையென்பா ருண்டென்பா ரனேகம் பேர்கள்
இருக்கையிலே சதாநித்த மறிவா லூட்டி
     இருப்பார்கள் மவுனமுத்த வாதி யாமே.
98
  
வாதியென்றா லவன்வாதி மவுன வாதி
     மகத்தான பிரபஞ்சத் திருந்தா லென்ன
வாதியென்றால் ரசவாதி ஞான வாதி
     வாங்காமற் சமாதியிலே யிருந்த வாதி
வாதி யென்றால் நிசவாதி நிர்மல வாதி
     வாய்திறக்க அண்டத்தே வாழ்ந்த வாதி
வாதியென்றா லவரிடத்தே சித்தர் செல்வார்
     மயக்குகின்ற செனனமில்லை முத்தி தானே.
99
  
முத்தியிந்த வாதிக்கு வருகு மென்று
     மூச்சு முதற் சிவன்சொன்னா ரென்று சொல்லிப்
பத்தியிந்த சிவசொத்தைப் பெண்ணுக் கீந்து
     பாழான விடயமெல்லாம் பண்ணிப் பண்ணி
அத்தியென்ற பஞ்சகத்தைப் பண்ணிப் பாவி
     ஆங்காரத் தால் திரிந்தும் வேதை போட்டு
மற்று நின்றே அலைந்தவர்க்கு நரக மெய்தி
     மாளுவார் கோடி சென்ம மருளு வாரே.
100
  
மருளாம லிருக்கவல்லோ வாதஞ் சொன்னார்?
     மாண்டிறந்து மாண்டிறந்து பிறக்கை நன்றோ?
வெருளாமல் மனம்பிடித்த வாதி யானால்
     வெகுசுளுக்கே யேறுதற்கு ஞான வீதி
அருளாமோ பொருளாமோ வென்றே யெண்ணி
     அலையாமல் நின்றவனே ஆதியோகி
இருளாமோ வெளியாமோ வென்றே யெண்ணி
     ஏகவெளி சுத்தவிரு ளாகிப் போமே.
101
  
ஆகவப்பா விருப்பத்தோ டஞ்சு நூறும்
     அறைந்திட்டேன் வாதத்தை யறிந்து கொள்ளு;