பக்கம் எண் :

சித்தர் பாடல்கள்565


பெண்டுபிள்ளை யென்பதுவும் விளையாட்டே - எங்கும்
     பேரோங்க வாழ்வதும் விளையாட்டே
கண்டுபொருள் தேடுவதும் விளையாட்டே - பணம்
     காசுவட்டி போடுவதும் விளையாட்டே.
7
  
மாடிமனை வீடுவாசல் விளையாட்டே - என்றன்
     மனைவிமக்க ளென்பதுவும் விளையாட்டே
தேடிவைத்த பொருளெல்லாம் விளையாட்டே - இச்
     செகத்திற் திரிவதுவும் விளையாட்டே.
8
  
ஆடுமாடு தேடுவதும் விளையாட்டே - சதுர்வே
     தாகமநூ லாய்வதுவும் விளையாட்டே
கூடுவிட்டுப் போகுமுயிர் விளையாட்டே - உற்றார்
     கூடிமகிழப் பேசுவதும் விளையாட்டே.
9
  
பிணமா யிருப்பதுவும் விளையாட்டே - அதைப்
     பெற்றோர்கண் டழுவதும் விளையாட்டே
குணமாய்க் கழுவியதும் விளையாட்டே - ஈமங்
     கொண்டுபோய்ச் சுட்டதுவும் விளையாட்டே.
10
  
செத்தோர்க் கழுவதுவும் விளையாட்டே - சுடலை
     சேரும்வரை அழுவதும் விளையாட்டே
மெத்தஞானம் பேசுவதுவும் விளையாட்டே - குளித்து
     வீடுவந்து மறப்பதும் விளையாட்டே.
11
  
வீணாட் கழிவதுவும் விளையாட்டே - சுடலை
     சேரும்வரை அழுவதும் விளையாட்டே
மெத்தஞானம் பேசுவதும் விளையாட்டே - குளித்து
     வீடுவந்து மறப்பதுவும் விளையாட்டே.
12
  
கனவுநினை வெண்பதுவும் விளையாட்டே - இக்
     காசினியோ ருழல்வதும் விளையாட்டே
நினவாய்ச்சேய் வஞ்சகமும் விளையாட்டே - மிக்க
     நிதிநிலம் பெண்ணென்பதும் விளையாட்டே.
13
  
பெண்ணாசை யென்பதுவும் விளையாட்டே - அவர்
     பின்னாற் திரிவதுவும் விளையாட்டே
மண்ணாசை யென்பதுவும் விளையாட்டே - நல்ல
     வயல்தோட்டம் புஞ்சையெல்லாம் விளையாட்டே.
14