சீராக வாழ்வதுவும் விளையாட்டே - செம்பொன் சேகரித்து வைப்பதுவும் விளையாட்டே நேராய்ப்பொய் சொல்வதுவும் விளையாட்டே - நெஞ்சில் நினைக்காமற் செய்வதுவும் விளையாட்டே. | 15 |
| |
பந்துசன மென்பதெல்லாம் விளையாட்டே - லோகப் பற்றுடனே வாழ்வதுவும் விளையாட்டே சொந்தநிதி தேடுவதும் விளையாட்டே - இதைச் சொற்பனம்போ லெண்ணாததும் விளையாட்டே. | 16 |
| |
யோகம்வந்து மகிழ்வதும் விளையாட்டே - அதன் உண்மைதெரி யாததுவும் விளையாட்டே சாகசஞ் செய்வதுவும் விளையாட்டே - ஒருவர் தஞ்சமென்று நினைப்பதுவும் விளையாட்டே. | 17 |
| |
கோடிபணந் தேடுவதும் விளையாட்டே - அதைக் குழிவெட்டிப் புதைப்பதுவும் விளையாட்டே தேடியலைவதும் விளையாட்டே - மனந் தேறுதலாய் திரிவதும் விளையாட்டே. | 18 |
| |
கற்பனையுங் கபடமும் விளையாட்டே - அதைக் காணாமல் மறைப்பதுவும் விளையாட்டே சற்பங்க ளாட்டுவதும் விளையாட்டே - ஒரே சாதனையாய்ப் பேசுவதும் விளையாட்டே. | 19 |
| |
நம்பினோருக் காசைசொல்லல் விளையாட்டே - பின்பு நாட்டாற்றில் போகவிடுதல் விளையாட்டே கும்பிக் கிறைதேடுதல் விளையாட்டே - கடன் கொடுத்தாரைக் கெடுத்தலும் விளையாட்டே. | 20 |
| |
இச்சையால் மயங்குவதும் விளையாட்டே - அதை இயல்பாய் மதிப்பதுவும் விளையாட்டே பிச்சையெடுத் துண்பதுவும் விளையாட்டே - பொல்லாப் பேய்போ லலைவதுவும் விளையாட்டே. | 21 |
| |
முத்தி யறியாததும் விளையாட்டே - மேலாம் மோட்சங் கருதாததும் விளையாட்டே பத்திகொள் ளாததுவும் விளையாட்டே - மனம் பாழிற் செலுத்தினதும் விளையாட்டே. | 22 |