பக்கம் எண் :

சித்தர் பாடல்கள்567


கேடு வருவதுவும் விளையாட்டே - எதற்கும்
     கெம்பீரம் பேசுவதும் விளையாட்டே
பாடு வருவதுவும் விளையாட்டே - மனப்
     பற்றுதலாய் நிற்காததும் விளையாட்டே.
23
  
பாசவினை போக்காததும் விளையாட்டே - பெண்
     பாவாயென் றழைப்பதும் விளையாட்டே
நேசமாய்த் தேடுவதுவும் விளையாட்டே - காணாமல்
     நிமிடநேர மென்பதுவும் விளையாட்டே.
24
  
நித்திரையிற் சொக்குவதும் விளையாட்டே - அதில்
     நினைவுதடு மாறுவதுவும் விளையாட்டே
சித்தியடை யாததுவும் விளையாட்டே - ஞானம்
     சிந்தியா திருப்பதுவும் விளையாட்டே.
25
  
சொற்பனமுண் டாவதுவும் விளையாட்டே - மனம்
     சொக்கா திருப்பதுவும் விளையாட்டே
விற்பனங்கண் டறிவதும் விளையாட்டே - வந்த
     விதமறி யாததுவும் விளையாட்டே.
26
  
பகலிர வென்பதுவும் விளையாட்டே - இகப்
     பயனடைந் திருத்தலும் விளையாட்டே
சகவாழ்விற் சிக்குவதும் விளையாட்டே - யோக
     சாதன மறியாததும் விளையாட்டே.
27
  
புத்திமா னென்பதுவும் விளையாட்டே - இப்
     பூதலத்தோ ரேத்துவதும் விளையாட்டே
வெற்றி யடைவதுவும் விளையாட்டே - நான்
     வீரனென்று சொல்வதுவும் விளையாட்டே.
28
  
தவநிலை தோணாததும் விளையாட்டே - ஞான
     தத்துவந் தெரியாததும் விளையாட்டே
பவமது போக்காததும் விளையாட்டே - ஏக
     பரவெளி காணாததும் விளையாட்டே.
29
  
யோகந் தெரியாததும் விளையாட்டே - அதன்
     உண்மைதனைக் காணாததும் விளையாட்டே
பாகம் அறியாததும் விளையாட்டே - இகப்
     பற்றுக்காது இருப்பதுவும் விளையாட்டே.
30